சேலம் தனியார் விமானப் பயிற்சி மையத்தில் ஏராளமானோர் விமானம் ஓட்டப் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஷெட் ரக பயிற்சி விமானத்தை (பழைய விமானம்) கேரளாவைச் சேர்ந்த பயிற்சியாளர் கேப்டன் ராகுல் இயக்கினார். அவருடன் பயிற்சி பெற வந்த இளைஞர் ஹாசின் இருந்தார். இருவரும் சேலத்தில் இருந்து திருச்சி வழியாகக் காரைக்குடி நோக்கிச் சென்றனர்.
விமானம் திருச்சியைக் கடக்கும் போது இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக சமிக்ஞை மூலம் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்த கேப்டன் ராகுல், தரை இறக்க ஏதுவான இடத்தைத் தேடினார். அப்போது விமானத்தின் முன்பகுதியில் ஒரு பகுதி உடைந்து விழுந்தது.
தொடர்ந்து திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியை அடைந்தது. மதிய நேரம் என்பதால் வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்தது. லைட் சிக்னல் கொடுத்துக்கொண்டே தாழ்வாக வந்த விமானத்தை கேப்டன் சாலையில் பாதுகாப்பாக இறக்கினார். விமானம் நீண்ட தூரம் ஓடிய பிறகு ஓரிடத்தில் நிறுத்தப்பட்டது.
தரை இறங்கிய உடன் பைலட்டும் பயிற்சி பெற வந்தவரும் பதற்றத்துடன் கீழே இறங்கினர். சம்பவ இடத்திற்குக் கீரனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அதே சமயம் வேடிக்கை பார்க்கப் பொதுமக்களும் குவிந்தனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/03-2025-11-13-17-43-27.jpg)
விமானம் சாலையில் தரை இறங்கிய தகவல் கிடைத்ததும் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். விமானத்தில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டிருப்பதைக் கண்டுபிடித்த அவர்கள், உடனடியாக அருகிலிருந்த குச்சி ஒன்றை ஒடித்து ஓட்டையை அடைத்தனர். எரிபொருள் கசிவு இருப்பதால் பொதுமக்கள் அருகில் வர வேண்டாம் என எச்சரித்தனர்.
விமானம் அருகே நின்ற பைலட் ராகுலும் ஹாசினும், “இயந்திரக் கோளாறு ஏற்பட்டு 15 நிமிடங்களுக்குள் தரை இறக்கிவிட்டோம். நீண்ட தூரப் பயண அனுபவம் இருப்பதால் பதற்றமின்றி உடனடியாகத் தரையிறக்கினோம்.” என்றனர்.
மாலை கடந்தும் விமானம் சாலையிலேயே நின்றதால், அவ்வழியாகச் செல்லும் வாகனப் பயணிகளும் சுற்றுவட்டார கிராம மக்களும் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். அகலமான சாலையில் விமானம் நிற்பதால் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்படவில்லை. இரவு மீட்பு வாகனம் வந்த பிறகு விமானம் அங்கிருந்து அகற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழன்று விழுந்த விமானப் பாகங்கள் மீட்கப்பட்டு, பைலட்டிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/01-2025-11-13-17-43-13.jpg)