புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள பிடாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டு குளத்தில் விட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகளில் ஒன்றான கொத்தமங்கலம் கிராமத்தில் எல்லைக் காவல் தெய்வமாக எழுந்தருளியுள்ள பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் கோயில் முளைப்பாரிக்கு விதை கொடுக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கி கோயில் முளைப்பாரிக்கு விதை தூவிய பிறகு கிராமத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு வீட்டிலும் மண் சட்டிகள், உள்பட பல்வேறு பாத்திரங்களில் நவதானிய விதைகள் தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து சிறப்பு வழிபாடுகளுடன் வளர்த்து வந்தனர்.
தங்கள் வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை அந்தந்தப் பகுதி மக்களும் தங்கள் குலதெய்வ கோயில்களில் வைத்து அலங்காரம் செய்து தாரை தப்பட்டை முழங்க வான வேடிக்கைகளுடன் கிராம மக்கள் நேற்று மாலை ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித் திடலைச் சுற்று ஒன்று சேர்ந்த பிடாரியம்மன் கோவிலை சுற்றி வந்து கோயில் முன்பு உள்ள பெரிய குளத்தில் விட்டனர்.
மேலும் முளைப்பாரியுடன் கொண்டு வந்த படையல் பொருட்களை ஒரே இடத்தில் குவித்து வைத்து படையலிட்டு வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பெண்கள் முளைப்பாரியுடனும் அதனைக் காண சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்ளும் வந்து கலந்து கொண்டனர். எதிர்வரும் 6 ந் தேதி புதன் கிழமை மது எடுப்புத் திருவிழா நடக்கிறது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.