'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார பயணம் நேற்று (07.07.2025) தொடங்கியது. மேட்டுப்பாளையத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து தன்னுடைய பிரச்சார பயணத்தைத் தொடங்கினார். அங்கு வந்திருந்த அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பரிசுகள் மற்றும் பூங்கொத்துகள் கொடுத்து அவரை வரவேற்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் பாதுகாப்பு அறிவித்துள்ள நிலையில் கூடுதல் பாதுகாப்பு வீரர்களுடன் எடப்பாடி வந்திருந்தார்.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் சுற்றுப்பயண நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகளிடம் ஒரு லட்சம் ரூபாய் பிக்பாக்கெட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தேக்கம்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள், செங்கல் சூளை உரிமையாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி கலந்துரையாடினார். அப்போது அதிமுக நிர்வாகிகள் வெளியில் சிலர் காத்துக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது அரங்கிற்கு வெளியே நின்று கொண்டிருந்த தேக்கம்பட்டி முன்னாள் ஊராட்சி துணைத் தலைவரும் அதிமுக ஒன்றிய பொருளாளரான தங்கராஜ் என்பவருடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. பிளேடு போட்டு அவருடைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் திருடிச் சென்றுள்ளனர். இதேபோல அதிமுக நிர்வாகி ஆனந்த் என்பவரிடமும், அபு என்பவரிடமும் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல்துறையில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.