காதல் திருமணம் முன்விரோதம் காரணமாக மணமகனின் சகோதரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பத்மாவதி என்ற பெண்ணுடன் திருமணமாகி அஸ்வந்த் என்ற மகன் உள்ளார். அஸ்வந்த், அதே பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணை நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் இந்த காதலுக்கு அனிதாவின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் அந்த எதிர்ப்பை மீறி அஸ்வந்த் மற்றும் அனிதா ஆகிய இருவரும் 5 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில், அஸ்வந்த் நேற்று தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அனிதாவின் தந்தை கவிராஜன் அவரை மறித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவரும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கவிராஜன், அங்கிருந்த கல்லை எடுத்து எரிந்ததில், அஸ்வந்தின் தந்தைக்கும் அவரது பேத்திக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இருதரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அப்போது போலீசார் இருதரப்பினரையும் கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், அஸ்வந்தின் சகோதரி பிரியதர்ஷினி வீட்டில், நேற்று இரவு மர்மநபர்கள் சிலர் ஜன்னல் வழியே பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர். இதனால் வீடு முழுவதும் தீ பரவி வீட்டில் இருந்த 35 பவுன் தங்க நகை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் கருகி சேதமாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்ததால் ஏற்பட்ட முன்பகை காரணமாக மணமகனின் சகோதரி வீட்டில் பெண் வீட்டார் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/25/pet-2025-12-25-12-51-39.jpg)