காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு எதிராக டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாத் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “சோனியா காந்தி கடந்த 1983ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளார். ஆனால் அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே 1980ஆம் ஆண்டில் டெல்லி தொகுதியின் வாக்காளராக அவரது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இத்தகைய சூழலில் தான் இந்த மனு நீதிபதி வைபவ் சவுரசியா அமர்வில் நேற்று (10.09.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பவன் நரங் வாதிடுகையில், ‘‘தேர்தல் ஆணையம் தவற்றைக் கண்டுபிடித்ததால் தான், கடந்த 1982ஆம் ஆண்டு சோனியா காந்தியின் பெயரை நீக்கியது. 1983ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை பெற்ற பிறகு தான் மீண்டும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது’’ எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த மனு இன்று (11.09.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “வாக்காளர் பட்டியலில் மோசடியாகச் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று சோனியா காந்திக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் சோனியா காந்திக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்ய உத்தரவிட முடியாது” எனத் தெரிவித்தார்.