கோவை மாவட்டம், காரமடை கண்ணார்பாளையம் அர்ச்சனா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (35). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்தை வியாபாரியான இவர், தனது வீட்டில் இரு வளர்ப்பு நாய்களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இவரது வீட்டு முற்றத்திற்குள் சுமார் 6 அடி நீளமுள்ள சாரைப் பாம்பு ஒன்று நுழைந்தது. பாம்பு வருவதைக் கண்ட வளர்ப்பு நாய்கள், அதை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து, தொடர்ந்து குரைத்து, பாம்பைத் தாக்கின. இதனால் பயந்து போன பாம்பு, அங்கிருந்த காருக்குள் புகுந்து ஒளிந்து கொண்டது.
இதைத் தொடர்ந்து, அருகில் இருந்த இளைஞர் ஒருவர் பாம்பைப் பிடித்து பத்திரமாக வெளியே விட்டார். இந்தச் சம்பவம், வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியது.வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை துணிச்சலுடன் தடுத்து நிறுத்திய வளர்ப்பு நாய்களின் இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.