வேலூர் மாவட்டம்  அம்பேத்கர் நகர் கஸ்பா பகுதியைச் சேர்ந்தவர் மதன். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற த.வெ.க. மாநாட்டிற்கு நண்பர்களுடன் காரில் சென்றுள்ளார். அதன்படி மாநாடு முடிந்தவுடன் அங்கிருந்து காரில் கிளம்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் திருச்சி அருகே வந்தபோது உணவு அருந்துவதற்காக காரில் இருந்த அனைவரும் காரில் இருந்து இறங்கி ஹோட்டலுக்குள் சென்றுள்ளனர். இதனையடுத்து அங்கு உணவு அருந்திவிட்டு மீண்டும் காரில் ஏறும் போது மதன் மட்டும் அங்கிருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது.

Advertisment

இதனால் மதனை அவரது நண்பர்கள் நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததாலும், நள்ளிரவு நேரம் ஆகிவிட்டதாலும் மதனின் நண்பர்கள் அங்கிருந்து கிளம்பி வேலூருக்கு சென்றுள்ளனர். இது குறித்து மதனுடைய உறவினர்களிடம் மதன் காணவில்லை எனக் கூறியுள்ளனர். அதோடு மதனின் மொபைல் நம்பருக்கு போன் செய்தாலும் சுவிட்ச் ஆஃப் என வந்தது. இது குறித்து  வேலூர் தெற்கு போலீசில் புகாரும் அளிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே திருச்சி அருகே உள்ள துவரங்குறிச்சி பகுதியில் சாலை விபத்தில் கடந்த 22ஆம் தேதி உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 

இது மதனுடைய உடலாக இருக்கலாம் என அடையாளம் காணும்படி துவாரக்குறிச்சி காவல் நிலையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற மதனின் உறவினர்கள் அவருடைய உடலை அடையாளம் கண்டனர். அதில் உயிரிழந்தது மதனின் உடல் தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து வேலூருக்கு உடல் கொண்டு வரப்பட்டது. த.வெ.க. மாநாட்டிற்குச் சென்ற இந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் வேலூரில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருந்தது. 

vlr-tvk-madhan-letter

Advertisment

இந்நிலையில் மதனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது அண்ணன் சீனிவாசன் வேலூர் மாவட்ட காவல் கண்பாணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக அவரது அண்ணன் சீனிவாசன் அளித்துள்ள புகாரில், “என் தம்பி  என். மதன் (தந்தை பெயர் : நாகேஷ்) ஆவார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். என் தம்பி மதன் கடந்த 20.08.2025 அன்று காலை சுமார் 11 மணிக்கு மதுரையில் நடக்கும் விஜய் மாநாட்டுக்காக வேலூர் சத்துவாச்சாரி டபுள் ரோடு பகுதியில், மை இந்தியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்திவரும் முக்தியார் என்பவரின் கட்டாயத்தின் பெயரில் என் தம்பியை அவர் சுயலாபத்திற்காக அவரது ஆதரவாளர்களான ஷபீர் (எ) போலு என்பவர் மூலம் எனக்கு எந்த தகவலும் கூறாமல் விஜய் மதுரை மாநாட்டிற்கு அழைத்து சென்றனர்.  

அதன் பின்னர் என் தம்பி 27.08.2025 அன்று உடல் சிதைந்து மர்மமான முறையில் இறந்து பிணமாக எடுத்து வந்து கொடுத்தனர். என் தம்பி மர்மமான மரணத்திற்கான காரணம் இதுவரை என்னவென்று தெரியவில்லை. ஆகையால் என் தம்பியை கட்டாயப்படுத்தி வேனில் அழைத்து சென்று பிணமாக கொண்டு வந்தது சம்மந்தமாக, உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட முக்தியார், மற்றும் ஷபீர் (எ) போலு ஆகியோரை அழைத்து விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுத்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்”எனத் தெரிவித்துள்ளனர்.