நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டுக்குள் பாதுகாப்புகளைக் கடந்து ஒரு நபர் உள்ளே நுழைந்தது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர்ப் பகுதியில் நடிகர் விஜய்யின் வீடு இருக்கிறது. உயர்ந்த மதில் சுவர்கள் மற்றும் கடுமையான பாதுகாப்புகள் உள்ள அந்த வீட்டுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் மாடியில் நடிகர் விஜய் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று இரவு மொட்டை மாடிக்கு சென்ற பொழுது மாடியில் ஒரு இளைஞர் ஒருவர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. விஜய்யை பார்த்ததும் அந்த நபர் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டு நான் உங்களுடைய ரசிகன் என தெரிவித்துள்ளார். விஜய் அவரிடம் பேசி ஆசுவாசப்படுத்தி கீழே அழைத்து வந்து பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இளைஞரின் நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருந்ததால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்து பாதிக்கப்பட்ட அந்த நபரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர். போலீசார் விசாரணையில் வீட்டின் பின் வழியாக பாதுகாவலர் இல்லாத நேரத்தில் உள்ளே நுழைந்தது தெரியவந்தது. நேற்று முன் தினத்திலிருந்து நேற்று பகல் முழுவதும் உணவு இல்லாமல் மொட்டை மாடியிலேயே அந்த நபர் இருந்துள்ளார்.
இந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளே புகுந்த நபர் நடிகர் விஜய்யின் மகனின் ஆடைகளை போட்டுப் பார்த்து அழகு பார்த்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. வீட்டில் சோதனை செய்ய காவல் ஆணையரிடம் நடிகர் விஜய் வலியுறுத்தியதாகவும் அதனைத் தொடர்ந்து அவருடைய வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.