கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதனை விசாரித்த நீதிமன்றம், அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு தமிழக அரசு வழிமுறைகளை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதனால், அரசியல் கட்சிகளின் கூட்டத்துக்கு நெறிமுறைகளை வகுப்பதற்காக அரசியல் கட்சிகளின் பிரச்சாரப் பொதுக்கூட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisment

இத்தகைய சூழலில், இன்று (05-12-25) புதுச்சேரியில் த.வெ.க. சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், ‘ரோடு ஷோ’ நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு அனுமதி கேட்டு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடமும், டி.ஜி.பி., அலுவலகத்திலும் த.வெ.க., நிர்வாகிகள் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் தேதி மனு கொடுத்தனர். ஆனால், புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, ரோடு ஷோ நடத்த வேண்டும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வரும் 9ஆம் தேதி விஜய் தலைமையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வேண்டும் என தவெகவினர் புதுச்சேரி சட்டம் - ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணியிடம் கடிதம் அளித்தனர்.

Advertisment

இந்நிலையில் புதுச்சேரியில் வரும் 9ஆம் தேதி நடைபெறும் விஜய் தலைமையிலான தவெக பொதுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அளித்தார். புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்த தவெக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் பொதுக்கூட்ட அனுமதி கடிதத்தைப் பெற்றுச் சென்றார்.