சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
அஜித்குமார் மரணத்தைக் கண்டித்தும், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்கும் வகையிலும் நாளை (13-07-25) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த போராட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் காவல் நிலையங்களில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்தவர்கள் குடும்பத்தினரை அழைத்து, த.வெ.க தலைவர் விஜய் இன்று (12-07-25) சென்னை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். அதனை தொடர்ந்து, காவலில் இறந்தோரின் குடும்பத்தினர் 18 பேரிடம் தனித்தனியாக விஜய் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கினார்.
இந்த நிலையில், சென்னை போராட்டம் நடத்த த.வெ.க கட்சிக்கு 16 நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. பட்டாசு வெடிக்கக் கூடாது, பைக் ஊர்வலம் கூடாது, ஊர்வலம் செல்லக் கூடாது என உள்ளிட்ட 16 நிபந்தனைகளை விதித்து த.வெ.க போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.