'Periyar was the one who praised Kamaraj as a 'Green Tamilian'' - Chief Minister explains Photograph: (m.k.stalin)
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா கலந்து கொண்டார். அப்போது அவர் காமராஜர் குறித்தும் பேசுகையில், “அப்போது எனக்கு 23, 24வது வயது இருக்கும் கலைஞர் என்னை காரில் அழைத்துக்கொண்டு செல்வார். அப்போது ஏதாவது நிகழ்வு பற்றி என்னிடம் சொல்லுவார். இதற்கு சில பேர் சொல்வார்கள், ‘என்ன சின்ன பையன் கிட்ட சொல்லிட்டு இருக்கிறார்’ என்று. ஆனால் அவருக்கு (கலைஞருக்கு) தெரியும் இதைப் பற்றி நான் கூட்டத்தில் பேசுவேன். மக்களிடம் சரியாகக் கொண்டு சேர்ப்பேன் என்று. அது மாதிரி நிறைய எனக்குச் சொல்லுவார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/17/a4453-2025-07-17-12-40-29.jpg)
அதில் ஒரு நாள், ‘காமராஜர் தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுக்க கண்டனம் கூட்டம் போடுறாரு. காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் உடம்பில் அலர்ஜி வந்துவிடும். அதற்காக அவர் தங்குகிற எல்லா பயணியர் விடுதிகளிலும் குளிர் சாதன வசதி செய்யச் சொல்லி உத்தரவிட்டேன். நம்மை எதிர்த்துத்தான் பேசுறாரு. ஆனால் அவருடைய உடல்நலன் கருதி நான் எல்லா பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதி செய்யச் சொன்னேன்’ எனக் கூறினார். அதன் பின்னர் இவ்வளவு பெரிய உள்ளமா அவருக்கு என்று கடைசியாகக் கையை பிடித்துக்கொண்டு உயிர் போறதுக்கு முன்னாடி நீங்கள்தான் இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றவேண்டும் என்று கூறினார்’” எனப் பேசியிருந்தார். திருச்சி சிவாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
கண்டனங்களைத் தொடர்ந்து 'உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!' என திமுக எம்பி திருச்சி சிவா அறிக்கை வாயிலாக கேட்டிருந்தார்.
இந்நிலையில் தமிழக முதல்வரும் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்!
பெருந்தலைவர் காமராசரைப் 'பச்சைத்தமிழர்' என்று போற்றியவர் தந்தை பெரியார். குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவர்க்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.
பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் தமிழினத் தலைவர் கலைஞர்.
உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு! அத்தகைய பெருந்தலைவர், பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.
சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்!' என தெரிவித்துள்ளார்.