சேலம் பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றி வருபவர் மூத்த பேராசிரியர் டி. பெரியசாமி ஆவார். இவர் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் நிலையில் இவர் மீது கல்வி நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, ஆராய்ச்சி மாணவர்களை வீட்டு வேலைக்குப் பயன்படுத்தியது, பல்கலைக்கழகத்தில் சக ஊழியர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அதிலும் குறிப்பாகப் பேராசிரியர் பெரியசாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என 19 மாணவர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் முழுமையான விசாரணை நடைபெற்றது. அதில் பேராசிரியர் பெரியசாமி மீதான குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் முகாந்திரம் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து பேராசிரியர் பெரியசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த ஜெகநாதனிடம், பெரியசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் பெரியசாமி ஜெகநாதனின் ஆதரவாளர் என்பதால் பெரியசாமி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற பேச்சும் நிலவி வந்தது. மேலும் அவர் பணியில் சேரும் போது 2 இடங்களில் பணியாற்றியதாகப் போலியான அனுபவச் சான்றிதழ்களைக் கொடுத்து பணியில் சேர்ந்தார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.