சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோவின் இல்ல திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், ''பீகார் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் மூலம் நாடு பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. அதேபோன்ற பிரச்சனை தமிழகத்திலும் வந்துவிடக் கூடாது என்பதற்காக தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர் தான் என்.ஆர்.இளங்கோ.
நாளை முதல் ஒரு வார காலம் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளுக்கு நான் செல்ல இருக்கிறேன். என்னுடைய வெளிநாட்டுப் பயணம் குறித்து நாளை விமான நிலையத்தில் புறப்படும் பொழுது கண்டிப்பாக அறிவிப்பேன். அதற்கு முன் இங்கே ஒரு முக்கிய தகவலைப் பரிமாறிக்கொள்ள விரும்புகிறேன். நமது தமிழ் சமுதாயம் சுயமரியாதையோடு தலை நிமிர்ந்து நடை போடுவதற்குகாரணம் தந்தை பெரியார் அவர்கள். அதனால்தான் பெரியாரை பற்றி எழுதிய பாவேந்தர் பாரதிதாசன் 'தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் மண்டைச்சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும்' என எழுதி இருந்தார். பெரியாரின் சிந்தனையை உலகம் தொடும் காட்சியை நாம் இந்த பயணத்தில் பார்க்க போகிறோம். உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்திருக்கக்கூடிய புகழ்மிக்க அறிவுசார்ந்த நிறுவனமாக போற்றப்படும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் அறிவாசான் பெரியாரின் திருவுருவப்படம் என் கைகளால் திறந்து வைக்க இருக்கிறேன் என்று எண்ணிப் பார்க்கும் பொழுது இப்பொழுதே மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கொண்டிருக்கிறேன்.
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் பிறந்து தமிழில் பேசி, எழுதி இருந்தாலும் அவருடைய சிந்தனைகள் இந்த உலகத்திற்கானது. அனைவருக்கும் பொதுவானது. அவர் வலியுறுத்திய சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, அனைவரும் சமம் ஆகிய கருத்துக்களுக்கு எல்லைகள் கிடையாது. இவை உலக மக்கள் அனைவரும் பொதுவான வகையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அடிபட்ட அறிவு மேதை அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்படுவது நம்முடைய தமிழ்நாட்டுக்கு பெருமை. அதற்கு முன் இளங்கோ வீட்டில் நடைபெறும் திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு தான் அந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறேன் என்பதை இங்கே சுட்டிக்காட்டுகிறேன். இந்த நேரத்தில் மணமக்களுக்கு நான் வைக்கும் ஒரு கோரிக்கை உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்' என்றார்.