ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பக்னு சோய் - பெலோ சோய் தம்பதியினர். இந்தத் தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகனை ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தங்கள் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, மற்ற இரு மகன்களுடன் ஏற்காடு காவேரிபீக் கிராமத்தில் உள்ள கராறா என்னும் தனியார் தோட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகத் தங்கி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி காலை 8:30 மணிக்கு தம்பதியினர் இருவரும் வழக்கம்போல தோட்ட வேலைக்குச் சென்றுள்ளனர்.
அந்நேரத்தில் வீட்டில் இருந்த பக்னு சோயின் இரு மகன்களும், அதே தோட்டத்தில் தங்கி வேலை செய்து வரும் பிற தொழிலாளர்களின் குழந்தைகளுடன் சேர்ந்து, சுமார் 300 மீட்டர் தொலைவில் தோட்டத்தின் ஒரு பகுதியில் விளையாடியுள்ளனர். அப்போது, பக்னு சோயின் கடைசி மகனான 4 வயது லபாடா சோய், மின் கம்பத்தில் இருந்து அறுந்து கிடந்த மின் கம்பியைத் தெரியாமல் தொட்டதால் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, லபாடா சோய் இறந்தது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்காமல், பெற்றோர் இருவரும் இணைந்து அவரது உடலை வேலை செய்யும் இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
இது குறித்து கிராம மக்கள் செம்மநத்தம் கிராம நிர்வாக அலுவலர் வைஷ்ணவிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர், சம்பவம் தொடர்பாக ஏற்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் ஏற்காடு காவல் ஆய்வாளர் வாசுகி, கிராம நிர்வாக அலுவலர் வைஷ்ணவி, வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது, தோட்ட மேலாளர் சுனிலிடம் குழந்தையின் மரணம் குறித்து காவல் துறைக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு, அவர் சரியான பதிலளிக்காமல் “எனக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் தகவல் தெரிவிக்கவில்லை” என்று மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.
பின்னர், குழந்தையின் பெற்றோர் பக்னு சோய், பெலோ சோய் தம்பதியிடம் விசாரித்தபோது, அவர்களுக்குத் தமிழ் தெரியாததால் காவல் துறையினரால் சரியாக விசாரிக்க முடியவில்லை. இந்நிலையில், குழந்தையின் மரணம் நரபலி என்று ஏற்காடு பகுதியில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. இதையடுத்து, ஏற்காடு காவல் துறையினர் குழந்தையின் மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து, குழந்தை மின்சாரம் தாக்கியே இறந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று பல கோணங்களில் விசாரணையைத் தொடங்கினர். மேலும், புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யவும் திட்டமிட்டனர்.
இந்நிலையில், சேலம் அரசு மருத்துவர் கோகுலரமணன் முன்னிலையில் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர். குழந்தையின் உடல் உறுப்புகளில் சிலவற்றை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, குழந்தையின் மரணம் குறித்து ஏற்காடு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் ஏற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us