'தி.மு.க., பா.ஜ.க.வின் ஆதாய நாடகத்தைத் மக்கள் ஏற்கமாட்டார்கள்'-விஜய் விமர்சனம்

A3114

'People will not accept the profiteering drama of DMK and BJP' - Vijay's criticism Photograph: (tvk)

'தி.மு.க., பா.ஜ.க.வின் அரசியல் ஆதாய நாடகத்தைத் மக்கள் ஏற்கமாட்டார்கள் என தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் விமர்சனம் வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கங்கை கொண்டான், கடாரம் வென்றான் என்று பெயர் பெற்ற. கடல் கடந்து படை நடத்தி. இலங்கை முதல் இந்தோனேசியா வரை தெற்காசியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி புரிந்த ஒப்பற்ற பேரரசன், மாபெரும் வெற்றிச் சரித்திரத்தைத் தன் மார்பினில் தாங்கியவன் சோழப் பேரரசின் வெற்றிப் பேரொளியாகத் திகழ்ந்த ராஜேந்திர சோழன். ராஜராஜ சோழனின் மகனாகப் பிறந்தாலும் தந்தையையும் தாண்டி வெற்றித் தடம் பதித்த தமிழ்ப் பேரரசன். தன் வெற்றியின் அடையாளமாக இருப்பதற்காக அமைத்த நகரம்தான் கங்கைகொண்ட சோழபுரம். ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளமாக நிமிர்ந்து நிற்கிற ஒரு நகரம். கங்கைகொண்ட சோழபுரம் கோவில், யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரியச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட பெருஞ்சிறப்பு கொண்டது.

மாபெரும் யானைப் படை, கடற்படையைக் கட்டமைத்திருந்த வீறு மிகுந்த சோழப் பேரரசால் அமைக்கப்பட்டு, இன்றளவும் தமிழ் மண்ணுக்கும் தமிழகத்திற்கும் தனிப்பெரும் அடையாளமாக இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு, தமிழையும் தமிழ்நாட்டையும் ஓரவஞ்சனையுடன் ஒதுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் பிரதமர் வந்து, ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு சோழர்களின் பெருமை குறித்து நமக்குப் பாடம் எடுப்பது போலவும் பேசிச் சென்றுள்ளார்.

75 ஆண்டுகளைக் கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார் தட்டிக்கொள்ளும் தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.க.. தமிழர் பெருமையான சோழப் பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால் இப்போது தமிழர்களுக்கு எதிராக இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதைக் கையில் எடுத்திருக்காது. இதையெல்லாம் செய்யாமல், ஒன்றியப் பிரதமர் வருகை தமிழ்நாட்டுக்குப் பெருமை என்று வாஞ்சையாகச் சொல்லிச் சிலாகித்தது இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசு.

சோழப் பேரரசின் பெருமையைக் கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து, ஒன்றிய பா.ஜ.க. கையில் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது தி.மு.க. அரசு. கீழடியில் கிடைத்த அசைக்க முடியாத ஆதாரங்களை மறைத்து. தமிழர் நாகரிகத்தையும் வரலாற்றையும் மூடி மறைக்க முயலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, இப்போது இங்கு வந்து சோழர்களின் பெருமை பற்றிப் பேசி உள்ளது. முழுக்க முழுக்கக் கபட நாடகமன்றி வேறென்ன?. ஏற்கெனவே, அரசியலில் கபட நாடகம் போடுவதையே இயல்பாகக் கொண்ட தி.மு.க.. இப்போது ஒன்றிய பா.ஜ.க. அரசின் கபட நாடகத்திற்குத் தாள் பணிந்து வணங்கி. தங்கள் மறைமுக உறவினருக்கு விசுவாசத்தைக் காட்டி உள்ளது. எதிர் எதிராக இருப்பது போல காட்டிக்கொண்டே, உள்ளுக்குள் மறைமுகமாக இணைந்து ஓர் அரசியல் நாடகத்தினை அரங்கேற்றும் தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் ஓரணியில் கபடதாரிகள் என்றுதானே அழைக்க வேண்டும்?

நாம் இப்படிச் சொல்வது. மறைமுகமாக ஓரணியில் இணைந்து இருக்கும் இவ்விரு கபடதாரிகளுக்கும். மக்களுக்குத் த.வெ.க. உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே என்ற வகையில் எரிச்சல் ஏற்படலாம். அதற்கு என்ன செய்ய? உண்மை ஒருநாள் அம்பலமாகத்தானே செய்யும். அரசியலில் தன் இரண்டாம் ஆண்டில் பயணிக்கும் தமிழக வெற்றிக் கழகமே. தமிழக வரலாற்றுப் பெருமைகளின் மீது பெரும் அக்கறை கொண்ட பேரியக்கம். சேர. சோழ. பாண்டியர்கள் ஆட்சியின் தொன்மப் பெருமைகளைப் பறைசாற்றும் பிரமாண்டமான அருங்காட்சியகம் ஒன்று சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என்று சென்ற ஆண்டிலேயே த.வெ.க. தீர்மானம் இயற்றியது.

ஆனால், பவள விழாக் கண்ட இந்தத் தி.மு.க.வோ. பா.ஜ.க. முதுகிற்குப் பின்னால் பதுங்கிக்கொண்டு பம்முகிறது. கொள்கை. கோட்பாடுகளுடன் அறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கம். இன்று அனைத்திலும் சமரசம் செய்துகொண்டு, தமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிராக உள்ள பா.ஜ.க.விடம் சரணடைந்து கிடப்பதுதான் வேடிக்கை. இல்லை இல்லை. இதுதான் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் வாடிக்கை.

மறைமுகமாகப் பா.ஜ.க.வும் தி.மு.க.வும் ஓரணியில் இருக்கும் கபடதாரிகளாக இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். இவர்கள் இருவரின் மறைமுகமான கபட நாடக அரசியலுக்கான தக்க பதிலடியை 2026 தேர்தலில் தமிழக மக்கள் உறுதியாகத் தருவார்கள்' என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

dmk b.j.p Tamil language tamizhaga vetri kazhagam tvk vijay
இதையும் படியுங்கள்
Subscribe