புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தை சுற்றியுள்ள மாங்காடு, வடகாடு, அணவயல், புள்ளான்விடுதி என சுற்றுவட்டார கிராமங்களில் பூ, மா, பலா, வாழை, தென்னை, மிளகு, நெல், மிளகாய் என அத்தனை விளைபொருளும் உற்பத்தியாகும்.

Advertisment

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகளை வாழ வைத்தது வாழை தான். மும்பை வரை தினசரி 10 லாரி வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை, தொழிலாளர் பற்றாக்குறையால் படிப்படியாக வாழை விவசாயம் குறைந்து தென்னை, பூ விவசாயம் வந்துவிட்டது. தற்போது, மறமடக்கி, புள்ளான்விடுதி, கருக்காக்குறிச்சி உள்ளிட்ட சில கிராமங்களில் மட்டுமே அதிகப்படியான வாழையும் மற்ற கிராமங்களில் குறைந்த பரப்பளவிலும் வாழை விவசாயம் நடக்கிறது.

Advertisment

இந்நிலையில் தான் நேற்று புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த கலை என்ற விவசாயி கீரமங்கலத்தில் உள்ள ஒரு காய் கனி தரகு மண்டிக்கு தனது தோட்டத்தில் விளைந்த 2 கற்பூரவல்லி வாழைத் தார்களை கொண்டு வந்து இறக்கிய போது அந்தப் பகுதியில் நின்றவர்கள் எல்லாம் அந்த வாழைத்தார்களை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தனர். காரணம் அந்த 2 வாழைத்தார்களும் ஒரு ஆள் உயரத்திற்கு வளர்ந்திருந்தது. அந்த தார்களைப் பார்த்த வியாபாரிகளும் போட்டி போாட்டு ஏலம் கேட்க சுமார் 40 கிலோ எடை கொண்ட ஒரு வாழைத்தார் ரூ.1500 வீதம் 2 வாழைத்தார்களும் ரூ.3000 த்திற்கு ஏலம் போனது. இதுவே முகூர்த்தம் அதிகமுள்ள காலமாக இருந்தால் ஒவ்வொரு வாழைத்தாரும் ரூ.3000 வரை ஏலம் போகும் என்கின்றனர் விவசாயிகள்.