திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் இருந்து புதுப்பேட்டை சாலை வரை மக்களைத் தேடி, மக்களின் தலைவர் கேப்டன் ரதயாத்திரை தொண்டர்கள் மத்தியில் பாதயாத்திரையாக பொதுமக்களைச் சந்தித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரதயாத்திரையை முதன்முதலில் திருப்பத்தூரில் இருந்து தொடங்கியுள்ளோம். ஏனெனில், தேரின் பணியை முடிக்க ஒரு மாத காலம் ஆகிவிட்டதால் குடியாத்தத்தில் இருந்து தொடங்குவதாக இருந்தோம். ஆனால், மழையின் காரணமாக தள்ளிப்போனதால், திருப்பத்தூர் மக்களுக்காக திருப்பத்தூரில் இருந்து இது தொடங்க வேண்டுமென கேப்டனின் ஆசிர்வாதத்தால் திருப்பத்தூர் பகுதியில் இருந்து இந்த ரதயாத்திரையை தொடங்குகிறோம்” என்று கூறினார்.
மேலும், “நாங்கள் பிரச்சாரத்தை ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆனது. எங்கு போனாலும் மின்சாரத்தைத் துண்டித்துவிடுகிறார்கள். 20 ஆண்டு காலமாக நாங்கள் இதைப் பார்த்து பழகிவிட்டோம். இது எங்களுக்கு புதியது கிடையாது. இதனால்தான் வண்டியிலேயே மைக், லைட் பராமரிப்பு அனைத்தையும் தயார்நிலையில் வைத்திருக்கிறோம். சவால்களையும், எதிர்நீச்சலையும் எதிர்கொள்வதுதான் தேமுதிக. “எங்கு சென்றாலும் மக்களின் எழுச்சி முதலில் கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், காஞ்சிபுரம், இப்போது திருப்பத்தூர் பகுதியில் ஒட்டுமொத்த மக்களும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.ஆகவே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைக்கும் கட்சிதான் ஆட்சி அமைக்கும். மக்கள் துணையோடு கேப்டன் விஜயகாந்த் ஆசியோடும் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.
பின்பு, “விஜயகாந்த் புகைப்படத்தை யாரும் அரசியல் ரீதியாக பயன்படுத்தக் கூடாது. கேப்டன் விஜயகாந்தை தங்களின் அரசியல் மானசிக குருவாக நினைக்கிறவர்கள் அவர்கள் கேப்டன் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி செய்யாவிட்டால், எங்கள் கட்சியும், கட்சித் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும், கூட்டணி அறிவித்த பின்பு எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சி பயன்படுத்திக் கொள்ளலாம்” என்றும் தெரிவித்தார்.
“விஜயகாந்த் மீது இலங்கை வாழ் தமிழர்கள் எவ்வளவு அன்பும் பாசமும் வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இந்த ரதயாத்திரை தேர் ஒரு முன்னுதாரணம். முல்லைக்கு தேர் கொடுத்தார் பாரிவள்ளல் என்று சொல்வது போல, இந்த உலகத்தில் முதல்வர்களுக்கோ, ராஜாக்களுக்கோ யாரும் தேரை பரிசாக வழங்கியதில்லை. விஜயகாந்த் மீது வைத்திருந்த அன்பின் காரணமாக இலங்கை வாழ் மக்கள் ரதயாத்திரை தேரை வழங்கியிருக்கிறார்கள். இதனை முல்லைக் கொடிக்கு தேர் சுற்றிவிட்டு சென்றதனால் தான் பாரி வள்ளல் என்று சொல்கிறார்கள். வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக வாழ்ந்த வள்ளலுக்காக இலங்கை தமிழர்கள் இந்த தேரை விஜயகாந்துக்கு வழங்கியிருக்கிறார்கள்” என்று பெருமையுடன் தெரிவித்தார்.