People of Chidambaram demand railway tunnel Photograph: (cuddalore)
சிதம்பரம் நகரத்தை ஒட்டியுள்ள கதிர்வேல் நகர்- மீதிகுடி ( LC 201) இடையே கதிர்வேல் நகரில் உள்ள ரயில்வே கேட்டில் ரயில் வருவதற்காக காத்திருப்பதால் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு காலதாமதம் ஏற்படுவதால் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரம் நகரத்தை ஒட்டி உள்ள கொத்தங்குடி ஊராட்சிக்குட்பட்ட கதிர்வேல் நகரில் இருந்து மீதிகுடி செல்லும் சாலையில் கதிர்வேல் நகரில் ரயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரயில்வே கேட் வழியாக சிதம்பரம் நகரத்திற்கு கதிர்வேல் நகர், சரஸ்வதி அம்மாள் நகர், தமிழன்னை நகர், முத்தையா நகர், மீதிகுடி, கோவிலாம்பூண்டி, நற்கந்தன்குடி,சிதம்பரநாதன் பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மாணவ மாணவிகள் தினம் தோறும் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள்.
அதேபோல் சிதம்பரம் நகரத்தில் இருந்து கோவிந்தசாமி தெரு, கொத்தங்குடி தெரு, நேதாஜி தெரு உள்ளிட்ட நகரத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கூட்டநெரிசல் இல்லாமல் ரயில்வே கேட் வழியாக அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரிக்கும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கும் செல்வதற்கு 1000-ற்கும் மேற்பட்டவர்கள் தினம்தோறும் சென்று வருகிறார்கள்.
இந்த ரயில்வே கேட் வழியாக பகல் மற்றும் இரவு நேரத்தில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில், கூட்ஸ் ரயில், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் வந்து செல்கிறது. இந்த ரயில்வே கேட் ரயில் வருவதற்கு முன் மூடப்படுவதால் திறப்பதற்கு 5 நிமிடம் முதல் 15 நிமிடம் மேல் ஆகிறது. அதில் பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள அனல் மின்நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றிச் செல்லும் கூட்ஸ் ரயில் வருகிறது என்றால் 20-நிமிடத்திற்கு முன்பே கேட் போட்டுவிடுகிறார்கள்.
இதனால் காலை நேரத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள் ரயில்வே கேட்டில் நின்று காலதாமதம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஒருமுறை ரயில்வே கேட் போடப்பட்டால் இரு பக்கத்திலும் 200-க்கும் மேற்பட்டோர் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.
இதே வெயில் மற்றும் மழைக்காலங்களில் ரயில் வருவதற்கு கேட் போட்டு விட்டால் ஒதுங்குவதற்கு கூட இடமில்லாமல் ரயில் சென்று கேட்டுத் திறக்கும் வரை காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ரயில்வே கேட் போடும் போது வரும் சத்தத்தை அறிந்து வாகனத்தில் வரும் பொதுமக்கள் கேட்டில் மாட்டக்கூடாது என்று வேகமாக வரும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறார்கள். இதில் ஜூலை 22-ந்தேதி காலை பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற பெண் ஒருவர் விபத்தில் சிக்கி 108 வாகனம் மூலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சிதம்பரம் நகராட்சி சார்பில் சிதம்பரம் நகரத்தில் வாகன நெரிசலை தடுக்கும் வகையிலும் அவசர ஊர்திகள் எளிதில் கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கு ஏதுவாக வடக்கு மெயின் ரோட்டில் உள்ள பைசல் மஹால் திருமண மண்டபம் முதல் சிதம்பரம் பேருந்து நிலையம் வரை லிங்க் ரோடு (வெளிவட்ட சாலை) அமைக்கும் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்தது.
இந்த சாலையின் வழியாக அவசர ஊர்திகள் உள்ளிட்ட வாகனங்கள் வந்து விரைவாக அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது இந்த நிலையில் அவசர ஊர்தியோ வாகனங்களோ ரயில்வே கேட்டில் நின்றால் 10 முதல் 20 நிமிடம் வரை காத்திருக்கும் சூழல் ஏற்படும், வெளிவட்ட சாலையின் நோக்கமே நிறைவேறாது.
எனவே இந்த ரயில்வே கேட் உள்ள இடத்தில் அண்டர் பாசிங் எனப்படும் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இவ்வழியாக செல்லும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ரயில்வே கேட் பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/22/a4509-2025-07-22-20-16-14.jpg)
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தொழிற்சங்க பிரிவு மாநில செயலாளர் தங்க.கஜேந்திரன் கூறுகையில், 'சிதம்பரம் நகரத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு அடுத்த படியான மாற்று வழியாக கதிர்வேல் நகர் - மீதிக்குடி ரயில்வே கேட் செயல்படுகிறது. சிதம்பர நகரத்திற்கு ஆளுநர், முதல்வர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரும் நேரத்தில் வாகன நெரிசலில் சிக்காத வகையில் இந்த வழியில் தான் அனைத்து வாகனங்களும் செல்கிறது. இந்த பகுதியில் தற்போது 30-க்கும் மேற்பட்ட நகர் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகள் உள்ளதால் பல்லாயிரம் கணக்கான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் இந்த வழியாக தினம் தோறும் செல்கிறது.
காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள், மாணவ, மாணவிகள் அரசு ஊழியர்கள் ரயில்வே கேட்டில் மாட்டிக்கொண்டால் 20 முதல் 30 நிமிடத்திற்கு மேல் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் இணைந்து இந்தப் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்' என்கிறார்.