தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி (27.09.2025) கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் தான் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து அவருடைய பிரச்சார சுற்றுப்பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 

Advertisment

அதே சமயம், சேலத்திலிருந்து விஜய்யின் பரப்புரை மீண்டும் தொடங்கப்படும் என அக்கட்சி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன்படி சேலம் மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (20.11.2025) மனு ஒன்றை அளித்திருந்தனர்.  அந்த மனுவில், “வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி சேலம் கோட்டை மைதானம், போஸ் மைதானம், கெஜல்நாயக்கன்பட்டி ஆகிய 3 இடங்களில் உள்ள ஏதேனும் ஒரு இடத்தில் விஜய் மக்களைச் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர். 

Advertisment

இருப்பினும் டிசம்பர் 4ஆம் தேதி கார்த்திகை தீபம் என்பதால் அன்றைக்கு அனுமதி வழங்க முடியாது என மாநகர காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்து கொள்ளும் உள்ளரங்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாளை (23.11.2025 - ஞாயிற்றுக்கிழமை), காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், காலை 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க உள்ளரங்கு சந்திப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, விரைவு குறியீட்டுடன் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 2000 பேர் மட்டுமே இந்த உள்ளரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.  கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment