அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து தொகுதி வாரியாக மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில் திருச்சியில் பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விவசாயிகளுக்குத் துன்பம் விளைவிக்கும் திட்டத்தைதான் கொண்டு வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் 20 கிணறுகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். சியா கமிட்டி அனுமதி அளித்துள்ளது. ஆனால் அமைச்சர் எங்களுக்குத் தெரியாது என்கிறார். தெரியாமல் அரசாங்கம் நடக்குமா?. இது சென்சிடிவான பிரச்னை. ஏற்கனவே டெல்டாவில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போட்ட அரசு திமுக அரசு. டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதனைத் தடுத்து நிறுத்தியது அதிமுக அரசு.
இப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள். ரத்து செய்வதற்கு அதிகாரம் இருக்கிறது என்றால், அனுமதி கொடுப்பதற்கும் அதிகாரம் இருக்கத்தானே செய்யும். இந்த அரசுக்குத் தெரிந்துதான் அனுமதி கொடுத்திருக்கிறது, இது விவசாயிகளின் விரோத அரசு. தீக்கதிரில் வந்த ஒரு செய்தியைச் சொல்கிறேன், திருச்சி மருத்துவமனையின் அவலம். அதிமுக ஆட்சியில் தலைசிறந்த மருத்துவமனையாக இருந்தது. தற்போது கடும் அவலத்தில் உள்ளது. செவிலியர், மருத்துவர், மருந்துகள் பற்றாக்குறை, கழிவுநீர் குப்பை சுத்தம் செய்யாமல் துர்நாற்றம் வீசுகிறது. அதனால் மக்கள் நிம்மதியாக சிகிச்சை பெற முடியவில்லை. அதுமட்டுமின்றி, எலி பெருச்சாளி எல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது.
திருச்சியில் பல நிலங்கள் அமைச்சர் துணையோடு அபகரிக்கப்பட்டதாக கடிதம் கொடுத்திருக்கிறார்கள். திருச்சி பேருந்து நிலையம் புதிதாகக் கட்டியிருக்கிறார்கள். அதற்கு அருகில் இருப்பது யாருடைய நிலம் என்றால், அமைச்சர் நேருவுடையது. 300 ஏக்கர் நிலம் உள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனத்துக்கு 500 ஏக்கர் இருக்கிறது. ஜி ஸ்கொயர் திமுகவின் பினாமியாக இருப்பதாகத் தகவல். நேருவுடைய நிலத்துக்கு மதிப்பு உயர வேண்டும் என்பதற்காக அங்கு பேருந்து நிலையம் கட்டியிருக்கிறார்கள். சிதம்பரம் செட்டியார் அன்னதான டிரஸ்ட் 17 ஏக்கரில் நேருவுக்கு சம்மந்தப்பட்டவர்கள் நிலத்தை மிரட்டி வாங்கியதாகப் பேசப்படுகிறது. சட்டரீதியாக இதில் தவறு இருந்தால் அதிமுக ஆட்சி அமைந்ததும் சொத்து மீட்டெடுக்கப்படும். ஸ்ரீரங்கம் குழந்தை முதலியார் தோட்டம் பகுதியில் 18 ஏக்கர் கோயில் நிலத்தை முறைகேடாக ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜி ஸ்கொயர் பதிவு செய்திருப்பதாக புகார் மனு கொடுத்திருக்கிறார்கள். அதிமுக அரசு அமைந்ததும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் உரியவரிடம் நிலம் ஒப்படைக்கப்படும்” எனப் பேசினார்.