தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த திமுக  நிர்வாகிகளுடனான  ஆலோசனை  கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Advertisment

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சாதனைகளை விரிவாகப் பட்டியலிட்டதுடன், ஒன்றிய பாஜக அரசையும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தார்.

Advertisment

குறிப்பாக, "நமது  முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு தொகுதியையும் பார்த்துப் பார்த்து செயல்படுவதால், இன்று தமிழ்நாடு இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் (கிட்டத்தட்ட 11% வளர்ச்சி) டபுள் டிஜிட் அடைந்து, இந்தியாவிற்கே வழிகாட்டியாக முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

பெரியப்பட்டி பகுதியில் அடியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம், தொகுதி முழுவதும் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளி கட்டடங்கள், அரசு கலைக்கல்லூரிக்கு 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடங்கள், திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திற்கு 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விடுதி கட்டடங்கள் கட்டப்பட்டன.

Advertisment

தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியைப் பிடிக்காத ஒன்றிய பாசிச பாஜக அரசு, இங்குள்ள "அடிமைகளுடன்" சேர்ந்து பல சதிகளில் ஈடுபடுகிறது. நிதி உரிமை, கல்வி உரிமை, மொழி உரிமை என மாநிலங்களின் உரிமைகள் அத்தனையும் பறிக்கின்ற வேலையை பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

மக்களவைத் தொகுதிகளைக் குறைத்து மாநில உரிமையைப் பறிக்கும் வகையில், தொகுதி மறுவரையறை (Delimitation) மூலம் தமிழ்நாட்டிலுள்ள 39 தொகுதிகளை 32 தொகுதிகளாகக் குறைக்க ஒன்றிய பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது. இதனை எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவராக இந்தியாவிலேயே நம்முடைய முதலமைச்சர் திகழ்கிறார்.

தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்  என்று திமுக பேசினால், ஆளுநர் ஆர்.என். ரவி "யாரோடு போராடப் போகிறீர்கள்? யாரை வெல்லுவீர்கள்?" என்று கேட்கிறார். ஆர்.என். ரவி அவர்களே, கடந்த நான்கு வருடங்களாக தமிழ்நாடு உங்களுடன் தான் போராடி வருகிறது. சட்டசபையில் எந்த கோப்பை அனுப்பினாலும் கையெழுத்துப் போடாமல் இருக்கும் ஆளுநரை எதிர்த்து சட்டபூர்வமாக நம்முடைய தலைவர் வெற்றி பெற்று வருகிறார்.

அதிமுகவில் இன்று இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி அணி, செங்கோட்டையன் அணி என 25க்கும் மேற்பட்ட அணிகள் இருக்கின்றன. திருச்சியில் மட்டும் மூன்று அணிகள் தனியாக இயங்குகின்றன. நான்கு மாதங்களுக்கு முன் பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி, இன்று அதே வாயால், "எப்பவுமே பாஜகவுக்கு நன்றிக்கடனுடன் இருப்பேன்" என்று சொல்கிறார்.

எடப்பாடி பழனிசாமி காரை மாற்றுவதும், காலை மாற்றுவதும் அவருக்கு ஒன்றும் புதிதல்ல. ஜெயலலிதாவின் கால், சசிகலாவின் கால், டிடிவி தினகரனின் கால், இப்போது நிரந்தரமாக மோடியின் காலில் சரணடைந்துள்ளார். தமிழ்நாட்டு மக்கள் இன்று அவரை செல்லமாக "முகமூடி பழனிச்சாமி" என்றுதான் அழைக்கிறார்கள். திராவிட மாடல் அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது" என்றார்.

நிர்வாகிகளை கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டது. அப்போது, "காலனி' என்ற சொல் இன்றும் பயன்பாட்டில் உள்ளது " என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், "காலனி' என்ற பெயர் கொண்ட குடியிருப்பு பெயர்களை மாற்ற நம்முடைய தலைவர் அவர்கள் அரசாணையை வெளியிட்டுள்ளார் என்றும், விரைவிலேயே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "கழகத்தின் ஆணிவேர் கிளைச் செயலாளர்கள்தான். பூத் கமிட்டி நிர்வாகிகள் தான் "கழகத்துடைய ஸ்டெத்தஸ்கோப்". அவர்கள் தான்  மக்கள் மனதிலே நம்பிக்கையை ஏற்படுத்த முடியும். பூத் கமிட்டி நிர்வாகிகள் ஒவ்வொரு குடும்பத்துடனும் அறிமுகமாகி, அரசின் திட்டப் பலன்களை அவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி (லேப்டாப்) வழங்கும் திட்டத்திற்காக இந்த நிதியாண்டில் 2000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தத் திட்டத்தை முதலமைச்சர் அவர்களே துவங்கி வைப்பார். இளைஞர்களுக்கு கழகத்தில் கூடுதல் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, வட்ட, கிளைக் கழகம் வரை இளைஞரணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மூத்த முன்னோடிகள் இளைஞர்களை வழிநடத்தி, அவர்களுக்குக் கழக வரலாற்றையும் கொள்கைகளையும் சொல்லித் தர வேண்டும்.

பிறப்பால் எல்லாரும் சமம் என்று,  நான் முன்பு பேசியபோது, பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. பல சாமியார்கள் தனக்கு மிரட்டல் விடுத்ததனர்.  ஒரு கோடி ரூபாய் வரை விலை வைத்ததனர். நான் கலைஞரின் பேரன். நான் சொன்னால் சொன்னதுதான். மன்னிப்பு கேட்க மாட்டேன். முடிஞ்சா நீதிமன்றத்திற்கு வாங்க" என்று பதிலளித்தேன்.

தலைவர் அவர்கள் 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளார். அடுத்த ஐந்து மாத காலம், கழக உடன்பிறப்புகள் அனைவரும் இதே உணர்வோடு களத்தில் நின்று பிரச்சாரத்தில் ஈடுபட்டால், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழக அணி நிச்சயமாக வென்று காட்டும். அந்த 200-க்கு முதல் தொகுதியாக இந்த திருவரங்கம் தொகுதி நிச்சயமாக அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார் உதயநிதி.