police Photograph: (erode)
ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோத செயல்களை தடுக்கும் விதமாக, மாவட்ட எஸ்.பி சுஜாதா உத்தரவின் பேரில், பல்வேறு தடுப்பு வகையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், கோபி மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், ஈரோடு கஸ்பாபேட்டை சக்தி நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
பின்னர், அவர்களிடம் இருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்ததில், அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது.தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில், திருவாரூர் மாவட்டம் விஸ்வநாதபுரம் அடுத்த பனங்கரையை சேர்ந்த பன்னீர்செல்வத்தின் மகன் முருகேசன் (31), இளியூர் அடுத்த மாங்குடியைச் சேர்ந்த சக்திவேல் மகன் மனோகரன் (22), ஈரோடு அடுத்த சேனாதிபாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் நாகேந்திரன் (21) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே, ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா பொருட்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் கொடுபவர்களின் ரகசியம் காக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக ஈரோடு மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Follow Us