மூத்த அதிகாரிக்கு, பியூன் ஒருவர் குடிநீருக்குப் பதிலாக சிறுநீர் பாட்டியலைக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டம் உதயகிரி பகுதியில் கிராமப்புற நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை (RWSS) அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் உதவி நிர்வாகப் பொறியாளராக சச்சின் கவுடா என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இதே அலுவலகத்தில் பியூனாக சிபா நாராயண் நாயக் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி சச்சின் கவுடாவும், சிபா நாராயண் நாயக்கும் அலுவலகத்தில் தாமதமாக வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது நாயக்கிடம், சச்சின் கவுடா ஒரு குடிநீர் பாட்டிலைக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு, நாயக் சிறுநீர் அடங்கிய பாட்டிலைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. குறைந்த வெளிச்சம் காரணமாகவும், வேலை தொடர்பான மன அழுத்தம் காரணமாகவும் சச்சின் கவுடா தெரியாமல் அந்த பாட்டியலை எடுத்துக் குடித்துள்ளார். அவர் மட்டுமின்றி, அவருடன் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ஊழியர்களும் அதே பாட்டியலை எடுத்து குடித்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்திலேயே, சச்சின் கவுடாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால், அவர் சிகிச்சைக்காக பெர்ஹாம்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, தான் குடித்த தண்ணீர் மாதிரியை ஆய்வக சோதனைக்கு கவுடா அனுப்பியுள்ளார். அதில், அம்மோனியா செறிவு வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளது. மேலும், அதில் கடுமையான கழிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சச்சின் கவுடா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தவுடன், இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், மூத்த அதிகாரிக்கு சிறுநீர் பாட்டிலைக் கொடுத்த பியூன் சிபா நாராயணன் நாயக் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இந்த செயலுக்கு பின்னால் உள்ள நோக்கங்கள் என்ன என்பது குறித்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.