Peacocks in clusters by poisoning - Tenkasi district in shock Photograph: (thenkasi)
தென்காசி மாவட்டத்தின் குருவிகுளம் பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் 50க்கு மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்திருப்பதாக வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட புளியங்குடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடம் வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக தனியார் தோட்டம் ஒன்றில் ஒரே இடத்தில் ஏராளமான மயில்கள் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியானவர்கள்.அது தொடர்பாக குருவிகுளம் பகுதியின் விவசாயியான ஜான்சன் என்பவரைப் பிடித்து விசாரித்திருக்கின்றனர். அநதப் பகுதியைச் சேர்ந்த ரவி, பாக்கியராஜ் இருவருக்கும் சொந்தமான நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த ஜான்சன் வாழை, மக்காச்சோளம், உளுந்து பாசிப்பயறு போன்றவற்றைப் பயிரிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் விதைத்திருக்கிறார் அதை எலி, மயில் போன்றவைகள் உண்டதால் பாதிப்படைந்திருக்கிறார். விவசாயம் பாதிக்கப்பட்டதால், ஜான்சன் அருகிலுள்ள நகர கடை ஒன்றில் விஷமான எலிமருந்தை வாங்கி மக்காச் சோளத்தில் கலந்து தோட்டம் முழுக்க ஆங்காங்கே போட்டிருக்கிறார். இரவு முழுக்க அதை சாப்பிட்ட 50க்கு மேற்பட்ட மயில்கள் ஒவ்வொன்றாக அந்தப் பகுதியில் செத்து விழுந்திருக்கிறது, என்பது வனத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
இப்படி கூட்டம் கூட்டமாக மயில்கள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்ட சம்பவம் அந்த யூனியன் பகுதியையே கதிகலங்க வைத்திருக்கிறது. இறந்த 50 மயில்களையும் வனத்துறையின் கால்நடை மருத்துவர்களான சாந்தகுமார், நிதீஷ்குமார் அங்கேயே உடற் கூறாய்வு செய்தனர். பின்பு அத்தனை மயில்களின் உடல்களும் வனத்துறையினரால் அங்கேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. அவர்களால் விவசாயி ஜான்சன் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்தியாவின் தேசிய அடையாளமான மயில்களைக் கொலை செய்வது சட்டப்படி மிகப் பெரிய குற்றமாகக் கருப்படுகிறது.
Follow Us