Patriotic music streets introduced for the first time in India in Mumbai
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அம்மாநில அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதில், இந்தியாவிலேயே முதன் முறையாக இசைச்சாலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, மும்பை நரிமன் பகுதியிலிருந்து ஒர்லிக்கு வடக்கு நோக்கிச் செல்லும் கடற்கரைச் சாலையில் சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு இசைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில், வாகனங்கள் 70 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் தருணங்களில், ஜெய் ஹோ எனும் பாடல் இசைக்கும். இதனை வாகனத்தின் உள்ளிருந்தே கேட்டு ரசிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த சாலையை அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஹங்கேரி தூதர் பரன் ஜாரி, சிவசேனா முன்னாள் எம்.பி. ராகுல் செவாலே மற்றும் மாநகராட்சி கூடுதல் கமிஷ்னர் அவினாஷ் தக்னே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சாலையைத் திறந்து வைத்துப் பேசிய பட்னாவிஸ், “இந்த கடற்கரைச் சாலையில் உருவாக்கப்பட்டுள்ள இசைச்சாலை பயணிகளுக்கு மகிழ்ச்சியான அனுபவத்தை ஏற்படுத்தும். ஹங்கேரி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சாலை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலத்தில் இது இன்னும் முறையாகச் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.
இது குறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஒர்லியில் இருந்து நிலத்தடி சுரங்கப்பாதையை விட்டு வெளியேறிய பிறகு நரிமன் பாய்ண்ட் வரை 500 மீட்டர் நீளத்திற்குச் சாலையில் இசை ஒலிக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. சாலையின் மேற்பரப்பில் குறிப்பிட்ட தூரத்தில் ரம்பில் பட்டைகள் வைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் இந்த பட்டைகளைக் கடந்து செல்லும் போது, வாகன டயர்களுக்கும் சாலையின் மேற்பரப்பிற்கும் இடையிலான உராய்வின் காரணமாக ஜெய் ஹோ என்ற இசை உருவாகிறது. இந்த முயற்சி மும்பைவாசிகளின் மனதில் தேசபக்தியை உருவாக்குகிறது. ஏற்கனவே, இதைப் போலவே இசையை உருவாக்கும் சாலைகள் ஹங்கேரி, ஜப்பான், தென்கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தியாவில் இதுவே முதல் பரிசோதனை முயற்சி’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us