உத்தரப் பிரதேச மாநிலம், மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சுனில் குமார். இவர் கடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு தனது இருசக்கர வாகனத்தில் சிசவுலி பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில் சுனிலுக்கு கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சுனிலின் உறவினர்கள் அவரை மீட்டு, மீரட் நகரில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனையான லாலா லஜ்பத் ராய் மெமோரியல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
சுனிலுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த இளநிலை மருத்துவர் பூபேஷ் குமார் ராய் அலட்சியமாகத் தூங்கிக் கொண்டிருந்தார். ஏ.சி முன் நாற்காலில் அமர்ந்து கொண்டு காலைத் தூக்கி எதிரே இருந்த மேஜையின் மீது வைத்து சாவகசமாக அசந்து தூங்கியுள்ளார். அதிக அளவில் இரத்தம் வெளியேறியதால் பதறிப்போன சுனிலின் உறவினர்கள், தூங்கிக் கொண்டிருந்த மருத்துவர் பூபேஷ் குமாரிடம் சிகிச்சை அளிக்குமாறு கெஞ்சியுள்ளனர். ஆனாலும், அதனையெல்லாம் பொருட்படுத்தாத மருத்துவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதன் காரணமாக, அதீத இரத்தப்போக்கால், காயமடைந்த சுனில் உறவினர்கள் கண்முன்னே அவசர சிகிச்சைப் பிரிவில் துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மருத்துவரின் அலட்சியத்தால் சுனில் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் வெளியே தெரிந்து பேசுபொருளான நிலையில், மருத்துவமனை நிர்வாகம் மருத்துவர் பூபேஷ் குமாரைப் பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் மருத்துவமனை முதல்வர் ஆர்.சி. குப்தா தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சுனிலின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே மருத்துவமனையில் கடந்த 2023ஆம் ஆண்டு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு அலட்சியமாக மருத்துவம் பார்த்தது குறித்து அவரது உறவினர் கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து சிறுவனின் உறவினரை கடுமையாகத் தாக்கியதைத் தொடர்ந்து மூவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் அதே மருத்துவமனையில் ஒரு மருத்துவரின் அலட்சியத்தால் ஒரு உயிர் பறிபோயிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மருத்துவமனைகளை அதிக அளவில் ஏழை, எளிய மக்களே பயன்படுத்தி வரும் நிலையில், அவர்களை மருத்துவர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அலட்சியமாக நடத்துவது வருத்தத்திற்குரியது. பொதுமக்கள் மருத்துவர்களை கடவுள் நிலையில் வைத்திருக்கின்றனர். அப்படிப்பட்ட மருத்துவர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, பொறுப்புணர்வுடன் செயல்பட்டு மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.