பல மாதங்களுக்கு முன்பு சிகிச்சைப் பெற்ற ஒரு நோயாளி, ஒரு பெண் மருத்துவருக்கு கிட்டத்தட்ட 5,000க்கும் மேற்பட்ட ஆபாச மெசேஜ்களையும், 1,000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளையும் செய்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் லோஹியா மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பல மாதங்களுக்கு முன்பு சிகிச்சை பெற்ற ஒரு நோயாளி, மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் பெண் மருத்துவர் ஒருவருக்கு 5,000க்கும் மேற்பட்ட ஆபாச மெசேஜ்களை அனுப்பியுள்ளார். மேலும், ஒரே நாளில் 1,000க்கும் மேற்பட்ட தொலைப்பேசி அழைப்புகளை செய்து துன்புறுத்தியுள்ளார். அழைப்பை ஏற்க மறுத்தால் கொலை செய்துவிடுவேன் என்று மருத்துவரை அந்த நோயாளி மிரட்டியுள்ளார். மருத்துவரை பின் தொடர்ந்து வந்துள்ளார். இதனால், அவர் தனியாக வெளியே செல்ல பயந்து, மருத்துவமனையில் இருந்து பிளாட்டுக்குத் திரும்பும் போது பாதுகாப்புக்காக மருத்துவமனை காவலரை அழைத்துச் சென்றுள்ளார்.

இதில் மன உளைச்சல் அடைந்த பெண் மருத்துவர், கடந்த மே 12ஆம் தேதி பெண்கள் உதவி என் 1090க்கு தொடர்பு இது குறித்து புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், அந்த நபரை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். அதில், அந்த நபரின் பெயர் மகேஷ் திவாரி என்பதும், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் மகேஷை தொலைப்பேசியில் ஆலோசனை வழங்கினர். இதனால், அவர் கடந்த சில நாட்களாக எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துள்ளார். இந்த நிலையில், பெண் மருத்துவருக்கு மீண்டும் ஆபாச மெசெஜ்களை அனுப்பி தொந்தரவு கொடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண், மீண்டும் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் மகேஷ் திவாரியை போலீசார் கைது செய்தனர்.