தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே அமைந்துள்ளது, பெரியகும்மனூர் கிராமம். இந்தப் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த ஊரில் யாரேனும் உயிரிழந்தால்.. அவர்களை அடக்கம் செய்வதற்காக அரசு சார்பில் 5 சென்ட் புறம்போக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சுடுகாட்டுக்கு செல்லும் பொது வழி பாதையை அருகிலுள்ள நிலத்தின் உரிமையாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான ராமமூர்த்தி என்பவர், ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இதனால் பெரியகும்மனூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள்.. சுடுகாட்டுக்கு செல்ல வழிப்பாதை இல்லாமல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேல் போராடி வருகின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் ஒன்றுசேர்ந்து வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் வழிப்பாதை கேட்டு பலமுறை புகார் மனு அளித்தனர். ஆனால், இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதிகாரிகள் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள்.. ஊருக்குள் இருந்தவர்களை அடக்கம் செய்ய முடியாமல் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகியிருந்தனர். இதனிடையே, கடந்த 2-ஆம் தேதியன்று பெரியகும்மனூர் பகுதியைச் சேர்ந்த வள்ளி என்ற 60 வயது மூதாட்டி.. உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். சோகமும் பதற்றமும் அடைந்த ஊர்மக்கள்.. இவருடைய சடலத்தை எப்படி அடக்கம் செய்வது எனத் தெரியாமல் தவித்து போயிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைச் செயலாளரும் மாவட்ட தலைவருமான முத்து தலைமையில், 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் ஊர் பொதுமக்களுடன் சேர்ந்து, மூதாட்டியின் சடலத்தை ராயக்கோட்டை பஞ்சப்பள்ளி சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர். இச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்.. இதுகுறித்து தகவலறிந்த பாலக்கோடு டிஎஸ்பி மனோகரன், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, போராட்டக்காரர்களுக்கு உறுதியளித்த அதிகாரிகள்.. பொதுவழி பாதையை ஆக்கிரமித்த ராமமூர்த்தியிடமிருந்து இடத்தை அளந்து.. பாதிக்கப்பட்ட மக்களிடம் மீட்டு கொடுத்தனர். இதனை அடுத்து, மூதாட்டியின் சடலத்தை அடக்கம் செய்த ஊர் பொதுமக்கள் 50 ஆண்டுகள் கனவை நினைவாக்கியதற்காக மாவட்ட தலைவர் முத்துவை தோளில் தூக்கி வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.