தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகள் முறையாக வரி செலுத்தவில்லை எனக் கூறி கேரளாவில், 30 ஆம்னி பேருந்துகளுக்கு தலா 2 லட்சம் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை  மொத்தம் 70 லட்சம் ரூபாய் வரை நேற்று (07.11.2025)  அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து கோவை வழியாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளா செல்லக்கூடிய தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகள் இன்று (08.11.2025) காலை வாளையார் சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டன.

Advertisment

அதாவது அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில், “தமிழகத்தைச் சேர்ந்த ஆம்னி பேருந்துகள் கேரளாவிற்குள் செல்லும்போது அபராத விதிப்பு போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடமாட்டோம் என்ற உத்தரவாதத்தைக் கேரள வட்டார போக்குவரத்துத் துறையினர் அளிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவு பிறப்பித்தால் மட்டுமே பேருந்தை இயக்க முடியும். இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநில அரசுகளும் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும்” என்ற நிபந்தனையை முன்வைத்து தமிழக எல்லையிலேயே ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Advertisment

இத்தகைய சூழலில் தான் இரு மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதாவது வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கேரளாவில் அபராதம் விதிக்க மாட்டார்கள் என வாய்மொழி உத்தரவு கொடுத்தனர். இதனையடுத்து ஆம்னி பேருந்துகள் மீண்டும் கேரளாவிற்கு இயக்கப்பட்டன. கோவையில் உள்ள கேரள எல்லையில் ஆம்னி பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.