சென்னை விமான நிலைய மெட்ரோ நிலையத்தில் இருந்து இன்று (02.12.2025) அதிகாலை விம்கோ நகர் மெட்ரோ நிலையத்திற்கு, மெட்ரோ ரயில் ஒன்று வழக்கம் போல் புறப்பட்டுச் சென்றது. அதன்படி இந்த ரயில் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தைக் கடந்து சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்து. இத்தகைய சூழலில் தான் இந்த ரயில் சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவழியில் திடீரென நின்றது. இதனால் சுமார் 40 நிமிடங்களாக மெட்ரோ ரயிலில் இருந்த 300க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளேயே காத்திருக்கும் சூழல் ஏற்பட்டு கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதனையடுத்து மெட்ரோ ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் விளக்கம் அளித்துள்ளது. அதாவது இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையம் மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மத்திய மெட்ரோ நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து உடனடியாகப் பயணிகள் அங்கிருந்து ரயில் பாதை வழியாக விரைவாக வெளியேற்றப்பட்டனர். அதோடு காலை 06.20 மணி முதல் இயல்பான சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். நீல வழித்தடத்தில் (Blue Line) விமான நிலையம் மற்றும் விம்கோ நகர் பணிமனை இடையே மெட்ரோ ரயில் சேவைகள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன. பச்சை வழித்தடத்தில் (Green Line) செண்ட்ரல் ரயில் நிலையம் முதல் புனித தோமையார் மலை (St. Thomas Mount) வரையிலும் ரயில்கள் வழக்கமான அட்டவணையின்படி இயங்குகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us