ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து காட்பாடி வரை செல்லும் வண்டி எண் 66057 மெமு ரயில் நாள்தோறும் இரவு 9:00 மணிக்குப் புறப்பட்டு, சுமார் 10:55 மணிக்குக் காட்பாடி சென்றடையும். இந்த ரயில் வழக்கம்போல் நேற்று சித்தேதரி ரயில் நிலையத்தில் நின்று மீண்டும் புறப்பட்டுச் சென்றது. அப்போது, திடீரென தண்டவாளத்தில் இருந்து பயங்கர சத்தம் வந்த நிலையில், ரயில் தடம் புரள முற்பட்டது.

உடனே சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர், சாதுர்யமாக ரயிலை உடனடியாக நிறுத்தியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால், சென்னை-பெங்களூரு செல்லும் ரயில் பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், அரக்கோணம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பயணிகள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே, இச்சம்பவத்தை அறிந்த ரயில்வே பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்டவாள உடைப்பைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வாலாஜா, காட்பாடி போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பயணிகள் பத்திரமாக மற்ற ரயில்களில் அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து, சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் தண்டவாள உடைப்பு சீர்செய்யப்பட்டு, ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.