தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.  சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவிக்கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அதிமுக-பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் பாஜகவின் முக்கிய பொறுப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், வானதி ஸ்ரீனிவாசன், தமிழிசை சவுந்தரராஜன், குஷ்பு உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் நிர்வாகிகள் மத்தியில் காட்டமாக பேசியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அதில் ''தமிழகத்தில் இன்னும் 65 நாட்களுக்குள் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. பேட்டி தருவது மட்டும் தான் கட்சியினுடைய பணியாக இருக்கக் கூடாது. சீனியர் தலைவர்கள் தங்களை மட்டுமே முதன்மைப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்தந்த தொகுதியில் இருக்கும் நிர்வாகிகளையும் முன்னிலைப்படுத்த வேண்டும். சீனியர்கள் தங்களுடைய தொகுதிகளுக்கு சென்றால் அந்த பகுதியில் உள்ள நிர்வாகிகளையும் முன்னிலைப்படுத்த வேண்டும்'' என காட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதேபோல் தொகுதி பொறுப்பில் இருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் குறித்து விவாதிக்க தடை விதிக்கப்படுகிறது எனவும் பி.எல்.சந்தோஷ் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.