Parts of the training plane fell off before it even landed and The search for one part is underway
சேலத்தை சேர்ந்த பயிற்சி மைய பயிற்சி விமானம் ஒன்று, இன்று மதியம் பயிற்சிக்காக திருச்சி வழியாக காரைக்குடி செல்லும் போது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நார்த்தாமலை மையப் பகுதியில் விஜயாலய சோழீச்சுரம் அமைந்துள்ள மேலமலை பகுதியில் பலத்த சத்தத்துடன் விமானம் தாழ்வாக பறந்த போது அங்கு வயல் வேலை செய்து கொண்டிருந்த மக்கள் அச்சத்துடன் பார்த்துள்ளனர்.
அப்போது மேலமலைக்கு தெற்கு பகுதியில் விமானத்தின் முன்பகுதியில் உள்ள ஒரு பாகம் கழன்று கீழே விழுந்துள்ளது. அதனைத் தொடர்ந்து பறந்த போது மேல மலைக்கு கிழக்குப் பகுதியில் காட்டுப் பகுதிக்கும் கிராமப் பகுதிக்கும் எல்லையில் உள்ள ஒரு வீடு அருகே ஒரு சைலன்சர் அமைப்பிலான ஒரு பாகம் உடைந்து விழுந்துள்ளது. அந்த பாகம் விழுந்த வேகத்தில் சுமார் முக்கால் அடி ஆழத்திற்கு பதிந்துள்ளது. இதனையடுத்தே முதல் பாகம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் வழக்கமாக விபத்துப் பகுதியாக குறிப்பிடப்படும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் விமானம் தரை இறக்கப்பட்டு ஓடி நின்றது.
மதிய நேரம் என்பதால் போாக்குவரத்து குறைவாக இருந்ததால் பெரும் விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளது. மேலும் விமானத்தின் பாகங்கள் கழன்று அதிவேகமாக பறந்ததில் இறக்கையில் அடிபட்டு பெட்ரோல் டேங்க் சேதமடைந்து எரிபொருள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. விமானத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த போது, முதலில் விழுந்த ஒரு பாகத்தின் மற்றொரு பாகம் எங்கே விழுந்தது என்று தெரியவில்லை என்று தேடிக் கொண்டிருக்கின்றனர். மேலும் கிராமப் பகுதியில் விழுந்து கிடந்த பாகங்களை பொதுமக்கள் உதவியுடன் போலிஸ் ஜீப்பில் போலிசார் மீட்டு வந்து ஒப்படைத்துள்ளனர். மேலும் வல்லுநர் குழுவினர் வந்து விமானத்தை முழுமையாக ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் அறிக்கையிலேயே விபத்துக்கான முழு விபரம் தெரிய வரும்.
Follow Us