குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் நேற்று (21-07-25) மாலை திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். மருத்துவ காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஜக்தீப் தன்கர் தெரிவித்திருந்தாலும், பா.ஜ.க தலைவர்கள் - ஜக்தீப் தன்கர் இடையே ஏற்பட்ட மோதலால் தான் அவர் ராஜினாமா செய்துள்ளார் என்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்த சில மணி நேரத்திலேயே காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறுகையில், “இது விவரிக்க முடியாதது, அதிர்ச்சியளிக்கிறது. இன்று மாலை சுமார் 5 மணி வரை நான் அவருடன் பல எம்.பிக்களுடன் இருந்தேன். இரவு 7:30 மணிக்கு தொலைப்பேசியில் அவருடன் பேசினேன். எதிர்பாராத இந்த ராஜினாமாவால், கண்ணுக்குத் தெரிந்த விஷயங்களை விட இன்னும் நிறைய தெரிகிறது. இன்று (22-07-25) நடைபெறும் வணிக ஆலோசனைக் குழு கூட்டத்திற்கு ஜக்தீப் தன்கர் தலைமை தாங்கி நீதித்துறை தொடர்பான முக்கிய முடிவுகளை வெளியிட திட்டமிட்டிருந்தார். அவர் அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் சமமாக நடத்தினார். இந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும். ஜக்தீப் தன்கர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது நாட்டின் நலனுக்காக இருக்கும்” என்று கூறினார்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், இரண்டாம் நாளான இன்று (22-07-25) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளுமே மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய போது பணமூட்டை விவகாரத்தில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்தை இரு அவைகளிலும் மத்திய அரசு கொண்டு வர திட்டமிட்டிருந்தது. ஆனால், நேற்று நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் தீர்மானம் பற்றி விவாதிக்க ஜக்தீப் தன்கர் ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. ஜக்தீப் தன்கரின் இந்த முடிவால் மத்திய அரசு அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஜக்தீப் தன்கர் நெருக்கம் காட்டியதை மத்திய அரசு தரப்பு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அண்மையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை ஜக்தீப் தன்கர் சந்தித்திருந்தார். இத்தகைய முரண்பாடுகளுக்கிடையே நீதித்துறையில் முறைகேட்டை தடுக்க தேசிய நீதிபதிகள் நியமனக் குழுவை அமைக்க ஜக்தீப் தன்கர் குரல் கொடுத்தார். இந்த சூழ்நிலையில், அவர் நேற்று திடீரென தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் ஒப்படைத்துள்ளார்.