நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று (21-07-25) டெல்லி உள்ள நாடாளுமன்றத்தில் தொடங்குகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் உள்ளிட்ட விவகாரங்கள் நடந்துள்ள நிலையில், இன்று நாடாளுமன்றக் கூட்டத்தொடர் கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
முன்னதாக இரு அவைகளையும் சுமூகமாக நடத்துவது குறித்து டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், திமுக எம்.பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதலை நிறுத்தியதாக் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருவது குறித்து அரசு தரப்பு மற்றும் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. அதில், எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்து கேள்விகளுக்கும் விதிகள் மற்றும் நடைமுறைகளுக்கு உட்பட்டு பதில் தர அரசு தயாராக இருப்பதாக கிரண் ரிஜுஜூ கூறியதாகக் கூறப்படுகிறது.