நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 1 வாரமாக நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடக்காமல் முடங்கியுள்ளது.

கடந்த 1 வாரமாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக இன்று (28-07-25) நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு செய்திருந்ததது. அதன்படி,  இன்று மக்களவையிலும், நாளை (29-07-25) மாநிலங்களவையிலும் என தலா 16 மணி நேரம் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த விவாதத்தில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று (28-07-25) காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆபரேஷன் சிந்தூர் விவாதத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிடோர் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டனர். அவை கூடியதுமே, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என மக்களவை மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளுடன் முழுக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால் விவாதம் நடத்தப்படாமல் மக்களவை மதியம் 1 மணிக்கும், மாநிலங்களவை மதியம் 2 மணிக்கும் ஒத்திக்கவைக்கப்பட்டது.