Parliament adjourned because Opposition parties continue to stir over SIR issue
நடப்பு ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று (01.12.2025) காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் துணை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதே வேளையில், தேர்தல் ஆணையம் கொண்டு வந்த எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மக்களவை தொடங்கிய போது மீண்டும் எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் மக்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதே போல், மாநிலங்களவை எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் மாநிலங்களவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.
இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் மொத்தம் 15 அமர்வுகள் என வரும் டிசம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில், 14 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us