இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) சார்பில் கடலூர் மாவட்டம் வேப்பூரில் 4வது மாநில மாநாடு இன்று (08-02-26) பிரமாண்டமாக நடைபெற்றது. ஐஜேகே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், சிறப்பு விருந்தினராக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார்.
இந்த மாநாட்டின் தொடக்கத்தில் 90 அடி உயர் கம்பத்தில் கட்சியி கொடியை, கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து நிறுவனர் பாரிவேந்தர் உறுதிமொழி வாசித்தார். இந்த மாநாட்டில் கட்சி சார்பில் திமுக அரசை கண்டித்தும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும், சாதி மத அடிப்படையில் இல்லாமல் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன போன்ற 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் பேசியதாவது, “பாரதம், தமிழ்நாடு என இரண்டும் எங்களுக்கு ஒன்று தான். இந்தியா வளர்ந்தால் தமிழ்நாடு தானாக வளரும். பாராளுமன்றத்தில் இருந்தேனே ஒழிய, ஏன் வந்தோம் என்று வருத்தமாக இருந்தது. ஏனென்றால் தமிழ்நாட்டு எம்.பிக்கள் எல்லாம் திட்டமிட்டு வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதற்காக பாராளுமன்றத்தை ஒரு நாளும் நடத்தவிட மாட்டார்கள். அதன் மூலமாக வளர்ச்சியை தடுத்தார்கள். அதுமட்டுமல்லாமல் தொடர்ந்து இன்னும் கெடுத்து கொண்டு இருக்கிறார்கள். இந்தியா வளரவில்லை என்றால் தமிழ்நாடு வளராது. எந்த நேரமும் எதிர்ப்பு, எதிர்ப்பு என்று செய்து கொண்டிருந்தார்கள். கல்விக்கான நிதி வரவில்லை என்கிறார்கள், நீங்கள் முறையான முறையில் கேட்டால் நிதியை கொடுப்பார்கள்.
எப்போதும் எதிர்ப்பு என்பதே தனது கொள்கை என்றால் அதனுடைய இழப்பு தமிழ்நாட்டுக்கு தான். கட்சி நடத்துவதால் அவர்களுக்கு எந்த லாபமும் கிடையாது. பாராளுமன்றத்திற்கு சென்ற போது முதல் நாளில் உறுதிமொழி எடுக்க வேண்டும். அப்போது என்னுடன் வந்த தமிழ்நாட்டு எம்.பிக்கள் எல்லாரும், தமிழ்நாடு வாழ்க, கட்சியில் இருக்கிற அத்தனை தலைவர்களும் வாழ்க என்று சொல்லி உறுதிமொழி எடுத்தார்கள். அன்றைக்கே எனக்கு உடன்பாடு இல்லை. நான் இந்தியா வாழ்க, தமிழ்நாடும் வாழ்க என்று கூறி உறுதிமொழி எடுத்தேன். அன்றைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் தலைவர்களை குறிப்பிட்டார்களே ஒழிய, அவர்கள் யாரும் நாடு, மாநிலம் என்று சொல்லவில்லை. அந்த தலைவர்கள் எல்லாரும் ஊழல் உற்பத்தியாளர்கள்.
இந்த திராவிட கட்சிகள் வந்த பிறகு தமிழ்நாடு ஊழல், லஞ்சம், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை இப்படிதான் இருக்கிறது. இப்படியே நாடு கெட்டுக்கொண்டிருந்தால் எப்படி எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும், நீங்கள் நலமாக இருக்க முடியும் என்று யோசிக்க வேண்டும். இலவசங்கள் கொடுத்தால் போதும் எவ்வளவு விலைவாசி உயர்ந்தாலும் பரவாயில்லை, வீட்டுவரி உயர்ந்தாலும் பரவாயில்லை, மின்சார கட்டணம் உயர்ந்தாலும் பரவாயில்லை என்று மக்கள் நினைப்பது கவலையாக இருக்கிறது. கேவலம் இந்த இலவசங்களுக்கு ஆட்பட்டு நீங்கள் மயங்கிக் கிடக்கிறீர்கள். இந்த நிலை மாற வேண்டுமென்றால் மக்களுடைய வளங்கள் வளரவேண்டும். நாம் இளைய கட்சியாக இருந்தாலும் நம்முடைய கருத்துக்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு சேரும்” என்று பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/08/parivend-2026-02-08-19-59-57.jpg)