கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதூர்கத்தை அடுத்த வேளாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவரது மகள் 22 வயதான பெரியநாயகி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த அன்பழகனின் மகன் 27 வயதான ராகுல் என்ற இளைஞருடன் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால், ராகுலின் பெற்றோர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ராகுலும், பெரியநாயகியும் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். பெரியநாயகி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், ராகுலின் பெற்றோர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருக்கும் ராகுலின் சித்தப்பா உள்ளிட்டோர் திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், கட்டப்பட்ட பஞ்சாயத்து மூலம் ராகுலின் உறவினர்கள் பெரியநாயகியின் குடும்பத்தினரை செருப்பால் அடித்து இழிவுபடுத்தியுள்ளனர்.
அத்துடன், ராகுல் கட்டிய தாலியை பெரியநாயகியின் கழுத்திலிருந்து அறுத்து, அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், நடந்தவற்றை மீறி ராகுலுடன் தொடர்பு வைத்திருந்தால் உங்கள் குடும்பத்தினரை ஊருக்குள் நுழையவிடாமல், ஊரை விட்டு ஒதுக்கி வைப்போம் என்று எச்சரித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு பெரியநாயகி, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “எட்டு வருடமாக காதலித்தோம், இஷ்டப்பட்டு திருமணம் செய்துகொண்டோம். எங்களை சேர்த்து வைக்காமல், ஊருக்குள் இழுத்துச் சென்று பஞ்சாயத்து நடத்தி, என் கணவரை என்னிடமிருந்து பிரித்துவிட்டனர். ராகுலை என்னுடன் சேர்த்து வைக்கவும், எங்கள் உயிருக்கு பாதுகாப்பு அளிக்கவும் உதவுங்கள்” என்று கவலையுடன் தெரிவித்தார்.