அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் திருமணமான 78 நாளில் புதுப்பெண் தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(50). இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜெயசுதா. இந்த தம்பதியினரின் மகள் ரிதன்யா(27). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 

இந்த நிலையில் புதுப்பெண் ரிதன்யா சேவூர் சாலையில் தனது காரை நிறுத்திவிட்டு, பூச்சி மருந்தைச் சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதற்கு முன்பு, தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில்,  ‘எனது மரணத்திற்கு காரணம் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் செய்த சித்ரவதை தான் காரணம்’ என்று ஆடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும்  கலங்க வைத்தது. 

இதனிடையே, ரிதன்யாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவிநாசியில் பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த சேவூர் போலீசார், கணவர் கவின்குமார் மற்றும் மாமனார் ஈஸ்வரமூர்த்தி இருவரையும் கைது செய்தனர். அதேசமயம் மாமியார் சித்ராதேவி மருத்துவச் சிகிச்சை பெற்றுவருவதால், நிபந்தனையின் பெயரில் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

Advertisment

இந்த சூழலில் நடந்த சம்பவம் குறித்து திருப்பூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாதுரை, எனது மகளை, ஒரு தந்தையிடம் சொல்லமுடியாத அளவுக்கு டார்ச்சர் செய்துள்ளனர். என் மகன் படுக்கையில் உன்னிடம் வேறு மாதிரி எதிர்பார்க்கிறான்... என மாமனார் பேசியுள்ளார். இதனையெல்லாம் கேட்டுட்டு நான் ஏன் உயிரோடு இருக்கிறேன் என்று தெரியவில்லை என கண்ணீர் மல்க பேட்டியளித்தார். 

அதேபோன்று தாய் ஜெயசுதா பேசுகையில், “மகளை கொடுத்து விட்டதால் மகனை போலவே பாவித்தோம். அவர்களுடன் இணக்கமாக செல்ல பலமுறை முயற்சித்தோம். அவர் விளையாட்டுக்கு கேட்பது போல தொழில் வைத்துத் தர வேண்டும் என கேட்டார். நான்கூட மருமகன் விளையாட்டுக்கு கேட்பதாக நினைத்து விட்டுவிட்டேன். ஆனால், எனது கணவர் அவருக்கு தொழில் வைத்து தர நினைத்தார். ஆனால், எனது மகளை கொடுமையாக நடத்தியுள்ளனர்.  நகை கேட்டும் தொந்தரவு செய்துள்ளனர். நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்று கொல்ல முடியாத அளவிற்கு எனது மகளை வேதனைப்படுத்தி உள்ளனர். அவர்களுக்கு உரியத் தண்டனை கிடைக்க வேண்டும். அப்போதுதான் எனது மகள் ஆத்மா சாந்தியடையும் எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.