'Parashakthi Group in Sangiku Pongal' - Seendum Manickam Tagore Photograph: (congress)
தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகிறது. இந்நிலையில் இன்று டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வீட்டு பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன், தமிழிசை, வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் அண்மையில் வெளியான பராசக்தி படத்தில் நடித்திருந்த நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பிரதமர் மோடி பேசுகையில், ''அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் பண்டிகை பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வேளாண்குடியினர் அறுவடையை கொண்டாடும் நாள் பொங்கல். கங்கை கொண்ட சோழபுரத்தில் வழிபட்டதை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன். திருக்குறளில் கூட விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் பாடல்கள் உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த தொடர்ந்து மத்திய அரசு உழைத்து வருகிறது. நமது பூமி நலமுடன் இருக்க வேண்டும். அதே நேரத்தில் அறுவடையும் இருக்க வேண்டும்'' என தெரிவித்திருந்தார்.
ஏற்கனவே பராசக்தி படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளை விமர்சித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எதிர்வினை ஆற்றி வந்தார். பராசக்தி படத்தை பார்த்து பணத்தை வீணடிக்க வேண்டாம் உள்ளிட்ட கருத்துக்களை எக்ஸ் வலைத்தளம் மூலம் மாணிக்கம் தாகூர் வைத்திருந்தார். அதேபோல் காங்கிரசின் திருச்சி வேலுச்சாமி திமுக மீதும், பராசக்தி படத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.
நேற்று நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி பொன் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த ராகுல் காந்தி 'மத்திய அரசின் சென்சார் போர்டு ஜனநாயகன் படத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழக மக்களின் குரலை ஒடுக்கும் முயற்சியில் பிரதமர் மோடி ஒருபோதும் வெற்றிபெற முடியாது' என எக்ஸ் தளத்தில் விஜய்க்கு ஆதரவாக வெளியிட்டிருந்த பதிவும் உற்றுநோக்கப்பட்டது.
இந்நிலையில் 'சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு; ஆனால் ஜனநாயகன் மட்டும் பிளாக்கில் உள்ளது' என மீண்டும் சீண்டும் வகையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு மேலும் புகைச்சலை கிளம்பியுள்ளார்.
Follow Us