வரும் பொங்கலுக்கு திரை ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 'பராசக்தி' மற்றும் ஜனநாயகன் ஆகிய இரு படங்களும் வெளியாக உள்ளன. ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இருபடங்களும் வருகின்ற பொங்கலுக்கு முன்னதாக வெளியாக உள்ளன. அந்த வகையில் சுதா கொங்கரா இயக்கத்தில் மிக பிரமாண்டமான முறையில் உருவாகியுள்ள படம் தான் பராசக்தி.
Advertisment
ஏற்கனவே கலைஞர் வசனத்தில், சிவாஜி கணேசன் நடிப்பில் 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி தமிழ் திரையுலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. அப்படத்தில் இடம்பெற்ற வசனங்கள் திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையே சமூகத்தில் உள்ள பல சிக்கல்கள் குறித்தான கேள்விகளையும் எழுப்பியது. இதனைத் தொடர்ந்து  அதே பெயரில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், பசில் ஜோசப், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 10 அன்று வெளியாக உள்ளது.
Advertisment
இந்நிலையில் 'பராசக்தி' படத்தினுடைய கதை என்னுடைய கதையில் இருந்து திருடப்பட்டது. எனவே அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என திரைப்பட இணை இயக்குனர் ஒருவர்உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 
இந்த வழக்கின் பின்னனியை பார்க்கையில், திரைப்பட இணை இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அந்த  மனுவில் '1965 ஆம் ஆண்டு தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த மொழிப்போரை மையமாக வைத்து 'செம்மொழி' என்ற பெயரில் கதை எழுதியதாகவும் அந்த கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் கடந்த 2010 ஆம்  ஆண்டே பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
Advertisment
187
chennai Photograph: (highcourt)
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 'பெண் சிங்கம்' என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியபோது 'செம்மொழி' என்று தலைப்பிட்ட அந்த கதையை கலைஞரிடம் கூறியதாகவும், அந்த நேரத்தில் மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொல்லி இருப்பதால் நீங்களே கதையை எழுதுங்கள் என்று கலைஞர் என்னிடம் சொன்னதால் அந்த கதையை எழுதியதாகவும் ராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த கதைக்காக கலைஞர் தன்னை பாராட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 
இதனை திரைப்படமாக எடுக்க கதையை பல தயாரிப்பாளர்களை நாடியதாகவும் அதன்படி சேலம் தனசேகரன் என்பவர் இந்த கதையை நடிகர் சூர்யாவிடம் கொடுக்க, அவர் அதை இயக்குனர் சுதா கொங்கராவிடம் கொடுத்திருக்கிறார். 'புறநானூறு' என்ற பெயரில் சூர்யா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்ட அந்த படம் டிராப் ஆனது. தற்போது அதே கதை'பராசக்தி' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
'செம்மொழி' என்ற தனது கதையை திருடி பராசக்தி படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமாக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 2025 ஜனவரியில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். செம்மொழி படத்தினுடைய அந்த கதையையும் பராசக்தி படத்தின் கதையையும் ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்றை அமைக்க தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு நீதிமன்றம் உத்திரவிட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைத்துள்ளார்.
இந்த மனு இன்று வெள்ளிக்கிழமை நீதிபதி எஸ்எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. இரு கதைகளும் ஒன்றா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி, இதுகுறித்து ஜனவரி இரண்டாம் தேதிக்குள் பதிலளிக்கும்படி பராசக்தி பட இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுருக்கிறார்.
மேலும் இந்த கதை திருட்டு புகார் மீது அனைத்து தரப்பினரையும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.