சென்னையின் இரண்டாவது விமான நிலையமாக காஞ்சிபுரம் பரந்தூரில் 5,750 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய விமான நிலையம் அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கான நிலம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று பத்திரப்பதிவு தொடங்கியுள்ளது.
ஏற்கனவே இந்த திட்டத்திற்காக பரந்தூர் கிராமங்களைச் சேர்ந்த வளத்தூர், தண்டலூர், சிங்கிலி பாடி, அக்கம்மாப்பாக்கம், ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் வருவாய்த்துறை ஈடுபட்டது.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்காக தாமாகவே முன்வந்து 50க்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் அதற்கான பத்திரப்பதிவு தொடங்கியிருக்கிறது. இன்று ஒரு நாள் மட்டுமே 50க்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவை தொடங்கி இருக்கின்றனர். இடம் வழங்குபவர்களுக்கு ஏக்கருக்கு 35 லட்சம் முதல் 2.5 கோடி வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது.
இன்று பத்திரப்பதிவு செய்யும் பொதுமக்களுக்கு 24 மணி நேரத்தில் அவர்களுக்கு உண்டான தொகையை வங்கியில் செலுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள மூன்று பத்திரப்பதிவு அலுவலகங்களில் இதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மேற்பார்வையில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறம் விமான நிலையத்திற்கு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வந்தாலும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் விமான நிலையத்திற்கு நிலம் கொடுக்க பத்திரப்பதிவை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.