புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் கீரமங்கலம் சாலை பகுதியில் தச்சு வேலை செய்து வரும் முருகேசன் மகன் மகேஸ்வரன். கால்களில் ஏற்றம் இறக்கம் குறைபாடு உள்ளதால் பெற்றோர் மனம் நொந்து போய் இருந்தனர். ஆனால் இது ஒரு பிரச்சனையே இல்லை என்ற எண்ணம் கொண்ட மகேஸ்வரன் தன் பெற்றோரை கவலைப்படாதிங்க என்னாலயும் சராசரியாக வாழ முடியும் சாதிக்கவும் முடியும் என்ற நம்பிக்கையை ஊட்டினார். விளையாட்டில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பள்ளியில் படிக்கும் போதே பளு தூக்க கற்றுக் கொண்டார். அறந்தாங்கி நகரில் இருந்தாலும் சிலட்டூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்க சென்றார்.
மாணவன் மகேஸ்வரனின் ஆர்வத்தைப் பார்த்த ஆசிரியர்கள் பளு தூக்க பயிற்சியும் ஊக்கமும் ஆக்கமும் கொடுத்தனர். மாநிலம் முழுவதும் நடந்த போட்டிகளில் சாதித்தார். தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த தேர்வில் வெற்றி பெற்றார். சென்னையில் ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்து 2ஆம் ஆண்டு படிப்பை தொடர்கிறார். விளையாட்டு ஆணையத்தில் தங்க வைத்து சத்தான உணவுகளும் பளூ தூக்க பயிற்சியும் அளிக்கப்பட்ட நிலையில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வாங்கினார். இதனால் துபாயில் ஆசிய பாராலிம்பிக் கமிட்டி சார்பில் நடக்கும் ஆசிய பாரா யூத் கேம்ஸில் பளு தூக்கும் போட்டிக்கு செல்ல இந்தியாவில் இருந்து 7 பேர் தேர்வானார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து 2 பேர் அதில் மகேஸ்வரன் ஒருவர். இந்தப் போட்டியில் பங்கேற்று 107 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்று இந்திய தேசிய கொடியை உயர்த்திக் காட்டி மகிழ்ந்தார்.
ஆசிய போட்டியில் வென்று வெள்ளிப் பதக்கத்தோடு ஊருக்கு வந்த மகேஸ்வரனை பெற்றோர் கட்டியணைத்து மகிழ்ந்தனர். ஊக்கமும் ஆக்கமும் கொடுத்த சிலட்டூர் பள்ளிக்கு அழைத்து பாராட்டி பள்ளி மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் உள்ள மகேஸ்வரன் நம்மிடம், “எனக்கு ஒரு கால் உயரமாகவும் மறுகால் உயரம் குறைவாகவும் இருக்கும். இதை நான் ஒரு குறையாகவே கருதவில்லை. ஏதாவது சாதித்து இதை மறைக்கனும் மறக்கனும் என்று நினைத்தேன். சிலட்டூர் பள்ளியில் ஆசிரியர்களும் எனக்கு ஊக்கமும் பயிற்சியும் கொடுத்தாங்க. தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் இடம் கிடைத்தது. இப்ப எனக்கு கடுமையான பயிற்சியும் சத்தான உணவு எல்லாம் கொடுக்கிறார்கள். என்னால் மெடல் அடிக்க முடியும் என்று நம்பி தமிழ்நாடு அரசு எனக்கு செலவு செய்து துபாய்க்கு அனுப்பியது. அந்த நம்பிக்கையை வீணாக்கல மெடலோட வந்துட்டேன்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/21/pdu-asian-para-olymbic-1-2025-12-21-17-05-50.jpg)
என்னைப் போன்ற கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வரப்பிரசாதம். இல்லன்னா என்னால வெளியில் செலவு செய்து பயிற்சி பெறவும் முடியாது. சத்தாண உணவும் சாப்பிட முடியாது. அத்தனை செலவுகளையும் நம்ம முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் உத்தரவிட எங்களுக்கு கிடைக்குது. அதனால தமிழ்நாடு அரசுக்கு நன்றி சொல்லனும். விரைவில் துணை முதலமைச்சரான விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி சாரை சந்தித்து நன்றி சொல்வேன். ஒலிம்பிக்கிலும் சாதிக்கனும் அதுக்கான பயிற்சி பெறுகிறேன்” என்றார். மேலும், மாற்றுத்திறன் எப்பவும் தடையில்லை. மனசு தான் மாற்றமடையாமல் இருக்கனும் என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/21/pdu-asian-para-olymbic-2025-12-21-17-04-31.jpg)