'Pandyas reclaimed Sembinadu with the help of Muslims' - Speech by the Chairman of the Archaeological Survey of India, V. Rajaguru Photograph: (history)
காயல்பட்டினம் வரலாற்று ஆய்வு மையம் சார்பில் நடந்த மூன்றாவது காயல் கலாச்சார சங்கம விழாவிற்கு அமைப்பின் தலைவர் வாவு செய்யது அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார்.
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் முகைதீன் தம்பி, கறுப்புடையார் பள்ளி ஆலோசகர் மர்ஜிக், வரலாற்று மைய துணை பொதுச்செயலாளர் இல்யாஸ், இளைஞர் ஐக்கிய முன்னணி துணைத் தலைவர் நூஹு சாஹிப் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் முகம்மது அபூபக்கர் வரவேற்றுப் பேசினார். ஒருங்கிணைப்பாளர் காயல் அமானுல்லா தொகுத்து வழங்கினார். செயற்குழு உறுப்பினர்கள் சாளை பஷீர், 'அரபுத்தமிழ் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி, மறுமலர்ச்சி' என்ற நூலையும், இப்ராஹிம் அன்சாரி, அனீஸ் அஹமது, அரபு - தமிழ் எழுத்து மாற்றி கருவியையும் அறிமுகம் செய்தனர்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் மஸாகிர், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவ்தியா கல்லூரியின் முன்னாள் தமிழ் துறை தலைவர் அப்துல் சமது சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சிகளில், வரலாற்று ஆய்வு மையத்தின் ஆவண சேகரிப்பு பொறுப்பாளர்களான சுல்தான் பாகவி, இப்ராஹிம் மக்கி, மக்மூது மர்ஜுக், தகவல் தொடர்பாளர்கள் உமர் ஒலி, சாலிக், செயற்குழு உறுப்பினர்கள் அஜிஸ், அபுசாலிஹ், பொதுக்குழு உறுப்பினர் பாதுல் அஸ்ஹப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, பாண்டிய மன்னர்களும் காயல்பட்டினமும் என்ற தலைப்பில் பேசியதாவது, தமிழ்நாட்டின் கிழக்குக் கடற்கரையில் பாண்டியர், இஸ்லாமியர் வரலாற்றோடு தொடர்புடைய தொண்டி, பெரியபட்டினம், காயல்பட்டினம் ஆகிய மூன்று ஊர்களும் பவித்திரமாணிக்கப்பட்டினம் என்றே வரலாற்றின் இடைக்காலத்தில் அழைக்கப்பட்டன. தூய்மையான மாணிக்கக் கல் வணிகத்தால் இவ்வூர்கள் இப்பெயர் பெற்றுள்ளன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/16/a4430-2025-07-16-07-16-30.jpg)
முதலாம் சடையவர்மன் குலசேகரப் பாண்டியன் கல்வெட்டில், இவ்வூர் ‘தென் கீழ்க் கடல் படர் காயலந்துறை’ எனவும், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டில் காயல்துறை எனவும் அழைக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் சோனகச் சாமந்தப்பள்ளியான பிழார் பள்ளி என்ற இஸ்லாமியப் பள்ளி இருந்ததைப்போல் இவ்வூரில் அதற்கு முன்பே சோனவப் பிள்ளார்ப் பள்ளி இருந்துள்ளது.
கி.பி.1325இல், கறுப்புடையார் பள்ளியில் சந்தியா தீப விளக்குகேற்ற, இவ்வூர் வியாபாரி வடவணிகன், இரண்டு அச்சு நாணயம் கொடுத்துள்ளான். இரண்டாம் மாறவர்மன் குலசேகரப் பாண்டியன் காலத்தில், கி.பி.1330இல், இரட்டைக்குளம் பள்ளிவாசலுக்கு சுல்தான், உய்யவந்தான், திருவனந்தான் ஆகியோர் தானம் வழங்கியுள்ளனர்.
முதலாம் மாறவர்மன் வீரபாண்டியனின் கி.பி.1345 ஆண்டுக் கல்வெட்டு, பவித்தரமாணிக்கபட்டினத்து கறுப்புடையார் சோனகப்பள்ளிக்கு, ஆரல் கத்தலை தரள தரங்கத்து சோனக வியாபாரி நாயகத்திடம், காகிற்றூர் நாடாள்வான் அவ்வூரில் உள்ள நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார். இக்கல்வெட்டில் செம்பிநாடு கொண்டருளிய என முதலாம் மாறவர்மன் வீரபாண்டியன் அழைக்கப்படுகிறான். திருப்புல்லாணி, கீழக்கரை, பெரியபட்டினம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகள் கீழ்ச்செம்பிநாடு, செம்பிநாடு எனப்படுகின்றன. மதுரையில் டில்லி சுல்தான்கள் ஆட்சி நடந்துவந்த காலத்தில் அவர்களிடமிருந்து செம்பி நாட்டை காயல்பட்டினம் முஸ்லிம்கள் உதவியுடன் பாண்டியர் கைப்பற்றியதால் முதலாம் மாறவர்மன் வீரபாண்டியன் செம்பிநாடு கொண்டருளிய என அழைக்கப்படுகிறான். இது பாண்டியர் வரலாற்றுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.
செம்பிநாட்டுக்காக டில்லி சுல்தான்கள் பாண்டியர் இடையே அடிக்கடி போர் நடந்திருக்க வேண்டும். மூன்று வகையான எழுத்தமைதியில் 15க்கும் மேற்பட்ட அரபிக் கல்வெட்டுகள் உள்ளதும், விஜயநகர மன்னன் வீர கம்பண உடையாரின் கி.பி.1371-ம் ஆண்டு முதல் கல்வெட்டும் திருப்புல்லாணி கோயிலில் தான் உள்ளது. கி.பி.14-ம் நூற்றாண்டு ஏர்வாடி ஏராந்துறைக் கல்வெட்டில் தமிழுடன் அரபி எழுத்துகளும் உள்ளன. இதன்மூலம் கி.பி.13, 14ஆம் நூற்றாண்டுகளில் பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரையில் முஸ்லிம் வணிகர்கள் ஆதிக்கம் செலுத்தியதை அறியலாம்.
அரிகேசரி பராக்கிரம பாண்டியன் கி.பி.1451இல் காயல்பட்டினம் துருக்க நயினாப்பள்ளியில் அர்த்தமண்டபம், இடைநாழி, பெருமண்டபம், அலம்புநீர் வாவி அமைத்து ஆத்தூர் என்ற ஊரையும் தானமாகக் கொடுத்துள்ளான். இதில் பள்ளிவாசல் குளம் அலம்புநீர் வாவி என குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலுக்கு தானமாக கொடுக்கப்பட்ட இறையிலி நிலம் தேவதானம் எனப்படுவதைப் போல முஸ்லிம் பள்ளிவாசலுக்கு கொடுக்கப்பட்ட இறையிலி நிலமும் தேவதானம் என கி.பி.1451 காயல்பட்டினம் கொடிமரத்து சிறுநயினார் பள்ளிக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
பெரிய குத்பா பள்ளியில் பெரிய அளவிலான சதுரத்தூண்கள் வெட்டுப் போதிகையுடன் உள்ளன. இது முற்காலப் பாண்டியரின் கலைப்பாணியில் அமைந்துள்ளதால் இப்பள்ளி கி.பி.9ஆம் நூற்றாண்டு அளவில் கட்டப்பட்டிருக்கலாம். பிற்காலப் பாண்டியர், நாயக்கர் காலத்திலும் இப்பள்ளி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதை இங்குள்ள தூண்கள் அமைப்பால் அறிய முடிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
விழா முடிவில் பொருளாளர் அகமது முகைதீன் நன்றி கூறினார்.