Panchayat Secretary transferred on Incident of streetlight pipes being recovered from a hardware store
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில், எல்.ஈ.டி தெரு விளக்குகள் அமைக்க பயன்படுத்தப்படும் சுமார் 850 எல் வடிவ இரும்பு குழாய்கள், சுமார் 150 தண்ணீர் இறைக்கும் 2 அங்குல இரும்பு குழாய்கள் மற்றும் பழைய பொருட்கள் ஊராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் இருந்து கடந்த வாரம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
அப்புறப்படுத்திய இரும்பு குழாய்கள் மற்றும் பொருட்கள் ஊராட்சி அலுவகத்தில் வைக்காமல் பழைய இரும்புக்கடையில் கிடப்பதாக மாவட்ட ஆட்சியர் அருணாவுக்கு ஆதாரங்களுடன் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று (02-12-25) மாவட்ட திட்ட இயக்குநர் திடீர் ஆய்வு செய்து பழைய இரும்புக்கடை குடோனில் இருந்து சுமார் 350 எல் வடிவ குழாய்களை மட்டும் மீட்டனர். ஆனால் மேலும் உள்ள பொருட்களையும் மீட்க வேண்டும், ஊராட்சி பொருட்களை பழைய இரும்புக்கடைக்கு அனுப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஊராட்சி பொருட்கள் பாதுகாப்பிற்காக எங்கள் குடோனில் வைத்ததாக பழைய இரும்புக்கடைஉரிமையாளர் அதிகாரிகளிடம் கூறியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் ஊராட்சிப் பொருட்களை பழைய இரும்புக்கடை குடோனுக்கு அனுப்பிய ஊராட்சி செயலர் மயில்வாகணனை பணியிட மாற்றம் செய்து கே.ராசியமங்கலம் ஊராட்சிக்கும், கே.ராசியமங்கலம் ஊராட்சி செயலர் தமிழ்வாணனை கொத்தமங்கலம் ஊராட்சிக்கும் பணியிட மாற்றம் செய்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவையடுத்து இரு ஊராட்சி செயலர்களும் உடனே பணியேற்றுக் கொண்டனர். ஆனால், கொத்தமங்கலம் ஊராட்சி பொருட்களை பழைய இரும்புக்கடைக்கு அனுப்பி ஊராட்சி செயலர் மீது பணியிட மாற்றம் செய்துள்ள ஊரக வளர்ச்சித்துறை நிர்வாகம் முறையான விசாரனை செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீதமுள்ள பொருட்களையும் மீட்க வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர் ஊராட்சி மக்கள்.
Follow Us