திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி, ஜனதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏ.கே. சீனிவாசன். இவர் ஆம்பூர் அருகே மேல் சாணாங்குப்பம் ஊராட்சிக்குப் பின்புறம் அமைந்துள்ள 7 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் அமைப்பதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் சிவகுமாரை அணுகினார். அப்போது, சிவகுமார் வீட்டு மனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெறுவதற்காக 12 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். இதற்காக சீனிவாசன் கடந்த ஒரு ஆண்டில் மொத்தம் 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், மீண்டும் 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதால் ஆத்திரமடைந்த சீனிவாசன், லஞ்ச ஒழிப்புத் துறைக் காவலர்களிடம் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறைக் காவலர்கள் ரசாயனத் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஊராட்சி மன்றத் தலைவர் சிவகுமாரை நேற்று வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலைக்கு வரவழைத்து, அவரிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

Advertisment

அப்போது மறைந்திருந்த திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. ராஜீவ், ஆய்வாளர் கௌரி மற்றும் உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறைக் காவலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் சிவகுமாரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். பின்னர், வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அவரிடம் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக விசாரணை மேற்கொண்டனர்.  அதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்து, சிவகுமாரை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மேல் சாணாங்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் சிவகுமார், வீட்டு மனைகள் பிரிவு அமைக்க அங்கீகாரம் பெறுவதற்காக லஞ்சப் பணம் பெற்றபோது கையும் களவுமாகக் கைது செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment