கிராம ஊராட்சிகளில் அனுமதியின்றி கட்டப்படும் கட்டிடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கடிதம் மூலம் இந்த அறிவுறுத்தலை கொடுத்துள்ளது.
அதில் '2500 சதுர அடிக்கு மேலாக மற்றும் 3000 சதுர அடி வரையிலாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு தாங்களாகவே சுயசான்று அடிப்படையில் விண்ணப்பிப்பதற்கு அனுமதி பெறலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. 3000 சதுர அடிக்கும் மேலாக 10,000 சதுரடிக்கு உள்ளாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்ததற்கான அனுமதியை பெற வேண்டும் என்ற நிலையும் உள்ளது.
இந்நிலையில் கட்டிட வரைபட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் அங்கீகரிக்கப்படாத கட்டிடங்கள் என்று வரையறை செய்யப்படுகிறது. அப்படி அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானங்களை நேரடியாக ஊராட்சி நிர்வாகம் கள ஆய்வு செய்ய வேண்டும். உரிய அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களை மூடி சீல் வைப்பதற்கான அதிகாரம் ஊரக நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.