Advertisment

‘‘கள்’ளில்லாமல் இனி தமிழர் விருந்து இல்லை’ - நாதகவினர் காதணி விழாவில் கள் விருந்து!

102

தமிழகத்தில் கள் இறக்குவதற்கும் குடிப்பதற்கும் தடை விதிக்கப்படுள்ள நிலையில் நா.த.க நிர்வாகி வீட்டில் நடந்த காதணி விழாவில் கள் விருந்தாக கொடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

தமிழ்நாட்டில் கள் குறித்த விவாதம் அவ்வப்போது எழுந்து வருகிறது. அப்போதெல்லாம், கள் தமிழர்களின் பாரம்பரிய உணவு, இயற்கையானது, உடலுக்கு நன்மை தருவது மற்றும் பனைத் தொழிலை ஊக்குவிக்கும் பானம் என்று வாதங்களும் கூடவே முன்வைக்கப்படுகின்றன. இதற்காகப் பல போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாட்டில் கள் இறக்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து, "கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை" என்ற முழக்கத்துடன் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

Advertisment

அந்த வகையில், கடந்த ஜூன் 15, ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள பெரியதாழை கிராமத்தில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற சீமான், தடையை மீறி பனை மரத்தில் ஏறி கள் இறக்கினார். இதற்கு சிலர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்புகளும் எழுந்தன.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் காது குத்து விழாவில் கிடா விருந்துடன் கள்ளையும் பரிமாறியுள்ளார். தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர்கள் தமிழன் சங்கர் - கீர்த்திகா தம்பதியினர்.  நாம் தமிழர் கட்சியின் மாநில இளைஞர் பாசறைச் செயலாளராக இருந்து வரும் தமிழன் சங்கர், தனது பிள்ளைகளுக்கு "செவி பொன்சேர்விழா: தமிழர் விருந்தோம்பல் பெருவிழா" என்ற தலைப்பில் காது குத்து விழாவை நேற்று நடத்தினார். இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும், தலைவாழை இலையில் கிடாக் கறி விருந்து மற்றும் பனங்கள்ளைப் பரிமாறியுள்ளார். இதனை விருந்தினர்கள் மகிழ்ச்சியுடன் உண்டு மகிழ்ந்தனர்.

இந்நிகழ்வில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியினர், "கள் போல் ஒரு மருந்து இல்லை! கள்ளில்லாமல் இனி தமிழர் விருந்து இல்லை!" என்று கூறி, இனி தங்கள் இல்ல விழாக்களில் கள்ளை விருந்தாகவும், மருந்தாகவும் பரிமாறுவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

ஆனால், கள் குடிப்பது உடலுக்கு நன்மை தரும் என்று எந்த மருத்துவ சான்றும் இல்லை. கள்ளில் 5 முதல் 10 சதவீதம் ஆல்கஹால் இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக, 4 சதவீதத்திற்கு மேல் ஆல்கஹால் உள்ள பானங்களைத் தொடர்ந்து உட்கொள்வது உடல்நலத்தைப் பாதிக்கலாம். சிலர் கள் குடிப்பது நல்லது என்று தவறான கருத்தைப் பரப்புகின்றனர். ஆனால், மருத்துவர்கள் கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பானம் என்று தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

seeman ntk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe