Palamedu Jallikattu; Two bullfighters tied, first place selected in team format Photograph: (madurai)
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் நேற்று (15-01-26) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையையொட்டி, உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
இந்தநிலையில், மாட்டுப் பொங்கல் தினமான இன்று (16-01-26) காலை மதுரை பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது. காலையிலிருந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி தற்பொழுது நிறைவடைந்துள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை பிடித்து பொந்துபட்டியை சேர்ந்த அஜித் மற்றும் பொதும்பு பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ஆகிய இரண்டு மாடுபிடி வீரர்கள் சம நிலையில் உள்ளனர்.
அதேபோல் 11 காளைகளை பிடித்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மூன்றாவது இடத்தில் உள்ளார். கிரிக்கெட்டில் சமன் ஏற்பட்டால் சூப்பர் ஓவர் போடுவது போல சிறிது நேரம் ஜல்லிக்கட்டு போட்டி நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் இருவரும் சமநிலையிலேயே இருந்ததால் குலுக்கல் முறையில் முதல் இடத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு வீரர்களும் முதல் பரிசு வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்று நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 சுற்றுகளாக மொத்தம் 870 காளைகள் அவிழ்த்து விடப்பட்ட நிலையில் 461 காளைகள் அடைக்கப்பட்டுள்ளது. குலமங்கலம் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்ந்தெடுக்கப்பட்டு டிராக்டர் பரிசை வென்றது. குலுக்கல் முறையில் இறுதியாக அஜித் முதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு கார் பரிசு வழங்கப்பட்டது. பிரபாகரனுக்கு இரண்டாவது பரிசு அளிக்கப்பட்டது.
Follow Us